Jayakumar : பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


”பெரிய மாற்றம் ஏற்படாது"


திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் எம்.ஜி.ஆர் இ-சேவை மையம் ஆகியவற்றை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். இதனை அடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது.


தமிழ்நாட்டிலே அவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, செந்தில் பாலாஜியை காப்பாற்ற நினைப்பது இப்படி பல பிரச்சனைகள் உள்ளூரில் இருக்கும்போது, பாட்னா செல்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார். 


மேலும், "மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் அரசியிலில் என்ன  மாற்றம் வேண்டுமானாலும் ஏற்படலாம். தேர்தல் நெருங்கும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. திமுகவில் இருக்கும் துச்சாதனன், சகுனி போன்றோரை அந்த கட்சியை வீழ்த்தி விடுவார்கள்" என்று தெரிவித்தார்.


"இனி கூட்டத்தைச் சேர்ப்பது எந்த பயனும் இல்லை”


தொடர்ந்து பேசிய அவர், "தேவையில்லாத பெட்டிகளை கழற்றி விட்ட பின்னர், ரயில் என்ஜின் போன்று அதிமுக சென்று கொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்.


இனி கூட்டத்தைச் சேர்ப்பது எந்த பயனையும் ஏற்படுத்தாது. தொண்டர்கள் ஆதரவு இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமி கழக பொதுச்செயலாளராக இருக்கிறார். நானும் இருக்கிறேன் என்று காட்டுவது போன்று கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் நடத்துகிறார்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.


"இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான்”


”திமுகவிற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான். அமலாக்கத்துறை சோதனையில் இருந்து  செந்தில் பாலாஜி உள்ளிட்ட எவரும் தப்ப முடியாது. மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என தெரிவித்தனர். 500 மது கடைகளை மூடி தற்போது புதிய கடைகளை திமுகவினர் ஆங்காங்க திறக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின் வாய்க்கு வந்ததை வரலாறு தெரியாமல் பேசுகிறார்.  விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" என்று தெரிவித்தார்.


மேலும், "கடல் அரிப்பு ஏற்படும் பகுதியில் பேனா நினைவு சின்னம் தேவையா? மக்களின் வரிப்பணத்தில் பேனா நினைவு சின்னமா? கலைஞர் கோட்டத்தை கட்டியது போன்று உங்களுடைய பணத்தில் அறிவாலயத்தில் பேனா நினைவுச் சின்னம் அமையுங்கள். மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடிய வகையில் ஏன் இந்த பேனா சின்னம் அமைக்க நினைக்கிறார்கள்...? எனவே அதிமுக சார்பில் வழக்கு தொடரத்துள்ளோம், விரைவில் தீர்ப்பு வர உள்ளது” என்றார் ஜெயக்குமார்.