கடந்த ஜூன் 5-ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவராக இருந்த காயிதே மில்லத்தின் 126-வது பிறந்தநாளையொட்டி சேப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சொல்வதை அதிகாரிகள் யாரும் கேட்பதில்லை என விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமாரை தோற்கடித்து எம்.எல்.ஏவான ஐட்ரீம்ஸ் மூர்த்தி இன்றைய தினம் ராயபுரத்தில் உள்ள ஐட்ரீம்ஸ் திரையரங்க வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்த நிலையில் இந்த 30 நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையே இல்லாத மாநிலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாக கூறினார். ஸ்டாலினை மக்கள் மதிப்பதில்லை என ஜெயக்குமார் விமர்சித்திருந்ததற்கு மக்கள் உங்களைத்தான் மதிப்பதில்லை எனவும் ராயபுரத்தில் இருந்து ஓடஓட விரட்டி, மயிலாப்பூரில் ஜெயக்குமாரை உட்கார வைத்துள்ளதாகவும் கூறிய ஐட்ரீம்ஸ் மூர்த்தி, சென்னையை பொறுத்தவரை கொரோனா பரவல் விகிதம் குறைந்துள்ள நிலையில், பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்து ஜெயக்குமாருக்கு ”மைக் மேனியா” நோய் வந்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.
28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமார் ராயபுரத்தில் தோற்ற பின்னும் அவர் இன்னும் மாறாமல் உள்ளதாகவும், அவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறிய மூர்த்தி, ”அரசியல் நாகரீகம் கருதி தமிழக முதலமைச்சர் செய்யும் நல்ல செயலை ஜெயக்குமார் பாராட்டவேண்டும் என்று கேட்டு கொண்டார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததை இஸ்லாமியர்கள் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், அதனால்தான் அதிமுகவை மக்கள் புறக்கணித்துள்ளதாக” தெரிவித்தார்.
ராயபுரம் தொகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக குப்பைகள் அள்ளப்படாமல் இருந்தநிலையில், அனைத்து குப்பைகளும் மாநகராட்சி மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஸ்டேன்லி மருத்துவமனையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2000 கொரோனா சிகிச்சை படுக்கைகளை அமைத்த நிலையில் தற்போது 1000 படுக்கைகள் வரை காலியாக இருப்பதாக குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் மக்கள் தடுப்பூசி போட ஆர்வமாக உள்ளதாக கூறிய ஐட்ரீம்ஸ் மூர்த்தி முதல்வர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைதான் அதற்கு காரணம் என தெரிவித்தார். திமுக அரசை விமர்சனம் செய்ய வேண்டுமானால் ஆறு மாதம் பொறுத்திருந்து விட்டு ஜெயக்குமார் விமர்சனம் செய்வது நல்லது என்ற ஐட்ரீம்ஸ் மூர்த்தி. ராயபுரம் தொகுதியில் தற்போது தினமும் 40 முதல் 50 என்ற அளவில் மட்டுமே கொரோனா தொற்று பதிவாவதாகவும் ராயபுரம் தொகுதியில் உள்ள 6 வட்டத்திலும் 60 பணியாளர்களை கொண்டு வீடுவீடாக காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். ராயபுரம் தொகுதியில் ஐ.ஏ.எஸ். மற்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தயாராகும் மையத்தினை கட்ட திட்டமிட்டுள்ளதாகவும், தொகுதியில் உள்ள எல்லா பகுதிகளிலும் கழிவுநீர் பிரச்சனை இல்லாத நிலையை உருவாக்குவோம் என பத்திரிகையாளர்களிடம் ஐட்ரீம்ஸ் மூர்த்தி தெரிவித்துள்ளார்.