பல நூற்றாண்டு காலமாக தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை பாரம்பரியமாக விளையாடி வருகின்றன. இந்த ஜல்லிக்கட்டானது ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். அதிலும், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்து வரும் நிலையில், இந்த போட்டிகளின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி விலங்குகள் நல அமைப்பான பீட்டா வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 


இதனை அடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு இளைஞர்கள் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம் நடத்தியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் நடத்த போராட்டமானது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. பேராட்டத்தை அடுத்து, அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு சட்டம் என்ற பெயரில் நிரந்தரச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.


ஆனாலும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய தொடர்ந்து முயற்சிக்கின்றன. பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.வி ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை வழங்கியது.  அப்போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 


மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசின் சட்டம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் இல்லை. தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் விதிவிலக்கிற்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது.  இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க முடியாது. மேலும், தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்ததால் அதில் தவறு இருப்பதாகவும் கருதவில்லை. எனவே தமிழக அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். 


இதுகுறித்து காங்கேயம் சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக அறங்காவலரும், அயலக தமிழர் நல வாரிய தலைவருமான  கார்த்திகேய சிவ சேனாதிபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக கலாச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதற்காக எத்தனையோ பேர் சட்டரீதியாக போராடி வந்தனர். அதில் சிறிய அளவு தான் பங்கு செலுத்தி இருப்பது தற்போது மகிழ்ச்சி அளிக்கிறது. 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதியும், 2021 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலினும் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட விவரங்களை கேட்டு, அதில் வெற்றி பெற தேவையான வாதங்களை முன்வைத்தனர். தற்போது தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.