ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வரவிருக்கிறது. இதில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இடம் பெறும் என தெரியவந்துள்ளது. தடைகளை உடைத்து தைரியமாக பெறப்பட்ட உரிமையாக தான் ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது. தமிழரின் உணர்வோடு கலந்த ஜல்லிக்கட்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 16 வரை மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என அடுத்தடுத்து நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண, தமிழ்நாடு மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.


கொரோனா தொடங்கிய நாள் முதல், ஜல்லிக்கட்டு போட்டிகள் இதுவரை தடையின்றி நடந்தன. ஆனால், இம்முறை ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக, முழு ஊரடங்கு தவிர்க்க முடியாததாக உள்ளது. அதே நேரத்தில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியுமா என்கிற கேள்வியும் எழுகிறது. பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்கிற கட்டுப்பாட்டை அரசு முன்வைக்கிறது.




ஆனால் ஜல்லிக்கட்டு விளையாட்டு அல்ல; பாரம்பரியம். நடைமுறை, வழிபாட்டு முறை, ஊர் திருவிழா என பலவற்றில் அடங்கும் ஒன்று. தெய்வ வழிபாட்டுடன் நடைபெறும் ஒருவிதமான சம்பிரதாயம். ஊர் கூடி மகிழ்ந்து வழிபட்டு விழாவை நடத்த வேண்டும் என்பதே அதன் நோக்கம். இங்கு பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு என்பது, மணமகள், மணமகன் இல்லாமல் திருமணம் நடத்துவதைப் போன்று தான். பார்வையாளர்கள் தான், ஜல்லிக்கட்டின் அடிநாதம். 


அவர்களின் ஆர்ப்பரிப்பில் தான், மாடுபிடி வீரர்களும், காளைகளும் துள்ளிவிளையாடுவார்கள். இன்னும் சொல்ல வேண்டுமானால், பலர் முன்னிலையில் தன் காளை துள்ளி விளையாடுவதை கவுரவமாக கருதி, களத்திற்கு வரும் மாட்டின் உரிமையாளர்கள் பலர். இதே போல தான் மாடுபிடி வீரர்களும். ஊரார் முன்னிலையில், தன் வீர தீரத்தை காண்பிக்க வேண்டும் என்பது தான் மாடு பிடி வீரனின் விருப்பம். இதற்கு இடைப்பட்டது தான் பரிசுகள். அங்கு கிடைக்கும் அண்டா, குண்டாவுக்காக யாரும் பங்கேற்பதில்லை. பிறரை மகிழ்த்து, தானும் மகிழ்விக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அதற்காக தான் அவ்வளவு செல்வு செய்து, காளைகளை பயிற்றுவிக்கிறார்கள். உயிரை பணயம் வைத்து காளைகளை அடக்குகிறார்கள். 




சரி, பார்வையாளர்களை கட்டுப்படுத்துவோம் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியே  நடத்தினால், ஜல்லிக்கட்டை ஆட்கள் இல்லாமல் நடத்தி விடமுடியுமா? வழக்கமாக 700 காளைகள் வரை ஜல்லிக்கட்டில் விளையாடும். கட்டுப்பாடு காரணமாக, அதை 500 ஆக குறைக்கிறார்கள் என்று கூட வைத்துக் கொள்வோம். ஒரு காளையை அழைத்து வர குறைந்தது 5 பேர் தேவை. 500 காளைகள் எனும் போது, அதுவே 2500 பேர் வருவார்கள். காளைகளை அழைத்து வர வாகனம் வரும் போது அதில் ஓட்டுனர் ஒருவர் வீதம், அதுவே 500 பேர் வருவார்கள். அது ஒருபுறம் இருக்கட்டும்... போட்டி நடத்துபவர்களை கணக்கில் எடுப்போம். பொரும்பாலும் சமுதாயங்கள் ஒன்றிணைந்து நடத்தும் விழாவாக தான் ஜல்லிக்கட்டு இருக்கிறது. பல சமூதாயங்கள் ஒன்றிணைந்த கமிட்டி தான் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும், குறைந்தது 10க்கும் மேற்பட்ட சமுதாயங்கள் சார்பில் ஒரு பிரதிநிதி என்று வைத்தால் கூட(ஒருவர் எல்லாம் வருவதை ஏற்கவும் மாட்டார்கள்) அவர்கள் 10க்கும் மேல் இருப்பார்கள். 


அது தவிர, காளைகளை கட்டுப்படுத்த குழு, மருத்துவ குழு, போலீஸ், உள்ளாட்சி பணியாளர்கள், கால்நடை மருத்துவ குழு, அவசர சிகிச்சை குழு என அவர்கள் மட்டும் 200 பேர் இருப்பார்கள். இது தவிர துவக்கி வைக்க வரும் அரசியல் பிரமுகர்கள், அவர்களுடன் வரும் உதவியாளர்கள் என அது ஒரு பெருங்கூட்டம். இவர்கள் எல்லாம் குறைக்கப்படுவார்கள் என்று கூ வைத்துக்கொள்வோம். இவர்களை கழித்தால், போட்டி நடத்துவது சிரமம்; அப்படியே நடத்தினால், அந்த ஜல்லிக்கட்டு எப்படி இருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது. 




ஜல்லிக்கட்டை முற்றிலும் தடை செய்ய முடியாது; அதே நேரத்தில் நடத்தவும் வேண்டும் என்கிற கையறு நிலையில் தமிழ்நாடு அரசு. கொண்டாட்டம், ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் என களம் அதிரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை மட்டுமே பார்த்த தமிழ்நாட்டு மக்களுக்கு, இந்த முறை ஆர்ப்பரிப்பு இல்லாத ஜல்லிக்கட்டு பார்க்கும் மனநிலை உண்டா என்றால், இல்லை என்கிற பதில் தான் பல இடங்களில் இருந்து வருகிறது. 


கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாம். அது நேரில் பார்ப்பவர்களை விட டிவியில் பார்ப்பவர்கள் தான் அதிகம். டிவியில் பார்ப்பதுதான் கிரிக்கெட் என்று நினைப்பவர்களும் அதிகம். அந்த பார்மட், ஜல்லிக்கட்டுக்கு ஒத்துவராது. பந்து செல்லும் இடத்தில் எல்லாம் கேமரா வைக்கலாம்; காளையும் பாயும் சந்தெல்லாம் கேமரா வைக்க முடியாது. அது இயற்கையாய் ஓடும் நதி போல... தடைகளை போட நினைத்தால், உடைப்பெடுத்து பாயுமே தவிர, தேங்காது. விளையாட்டுக்கும் வீரத்திற்கும் அடுத்து ஒரு சமூகத்தின் அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டுக்கு கட்டுப்பாடு என்பது நிச்சயம் ஓர் ஆண்டு தவமிருந்து காத்திருக்கும் மாடுபிடி வீரருக்கும், காளை உரிமையாளருக்கும் நெஞ்சில் பாய்ந்த ஈட்டியே!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண