தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் மற்றொரு பக்கம், ஒமிக்ரான் திரிபு வகை தொற்று மக்களிடையே பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 2731 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, கடைகளுக்கான நேரம் குறைப்பு, கேளிக்கைக்கான இடங்களில் 50 சதவிகிதம் மட்டுமே அனுமதி எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனாவைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறைகளில் டாஸ்மாக் கடைகளுக்கான நேரம் குறைப்பு என்றோ, மூடப்படும் என்றோ எந்தத் தகவல்களும் இடம்பெறவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதால் அன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியில் கொரோனா ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது சர்ச்சைக்குரியதாகவும், பேசுபொருளாகாவும் மாறியது.
கடந்த 2020ஆம் ஆண்டு, கொரோனா முதல் அலையின் போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் 24 முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. எனினும், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அதே ஆண்டு மே 7 , 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் குடும்பத்தினருடன் வீட்டு வாசலில் கறுப்பு உடை அணிந்து டாஸ்மாக் திறப்பைக் கண்டித்து போராட்டம் நடத்தினார். எனினும், கொரோனா ஊரடங்கு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.
அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கிய பிறகு, சென்னையைத் தவிர பிற பகுதிகளில் 2020ஆம் ஆண்டு மே 16க்குப் பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து 2020ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16 முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. எனினும் அவற்றின் நேர நடைமுறை குறைக்கப்பட்டு இருந்தது. டோக்கன் நடைமுறைகள் கூட பல்வேறு மாவட்டங்களில் பின்பற்றப்பட்டன.
அதிமுக அரசின் இந்த முடிவை அப்போதைய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.டி.வி.தினகரன் முதலானோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
கொரோனா இரண்டாம் அலை கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கியது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன், கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் அமலுக்கு வந்தன. எனினும், அதே ஆண்டு ஜூன் 14 முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேரக் கட்டுப்பாட்டுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதனைத் தற்போதைய எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் கடுமையாக எதிர்த்தன.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்த பிறகு, ஓரளவு இயல்பு வாழ்க்கை திரும்பியது. தற்போது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதில் டாஸ்மாக் குறித்த தகவல்கள் எதுவும் இடம்பெறவில்லை. இதனை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.