ஜெயலலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு எனவும் மத நம்பிக்கை இல்லை எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டபோது செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரின் வெற்றிடத்தை தமிழகத்தில் பாஜக நிரப்பி வருகிறது. மேலும், 2014ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்து வாக்காளர்களின் இயல்பான தேர்வு அதிமுகவாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். ஜெயலலிதா மறைவுக்கு பின் இந்துத்துவா கொள்கையில் இருந்து அதிமுக விலகி விட்டது. அவரது மறைவும் மோடியின் வருகையுமே பாஜக வளர காரணமாக உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை உண்டு எனவும் மத நம்பிக்கை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என அண்ணாமலை குறிப்பிடுவது அவரது அறியாமையையும், தவறான புரிதலையும் வெளிப்படுத்துகிறது. ஜெயலலிதா சாதி, மத, பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்.
அவர் “மக்களால் நான்..மக்களுக்காகவே நான்” என்று தன் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலனுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த சிறந்த மக்கள் தலைவர். அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி ஜெயலலிதா தான் என்பது நாடறிந்த உண்மை. சாதி, மத பேதங்களை கடந்து ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தன்னைத் அவர் அர்ப்பணித்துக் கொண்டார்.” என தெரிவித்துள்ளார்.