10 ஆண்டுகளுக்கு முந்தைய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மாநிலச் செயலாளர் பிரதீப் யாதவுக்கு, இரண்டு வார சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக மூவருக்கு சிறை
2012-ம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கல்வியின் அப்போதைய இயக்குநர் முத்து பழனிச்சாமி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் முனாஞ்சிப்பட்டி கல்வி நிறுவனத்தின் அப்போதைய முதல்வர் பூபாலா ஆண்டோ ஆகிய இருவருடன் இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும். 2012-ம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறிய குற்றத்திற்காக மூவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி பட்டு தேவானந்த்.
மேலும், இந்த நடவடிக்கைக்காக அவர்கள் ஆகஸ்ட் 9-ம் தேதி அல்லது அதற்கு முன் உயர்நீதிமன்ற மதுரை பெஞ்ச் பதிவாளர் (நீதித்துறை) முன்பு சரணடையுமாறு உத்தரவிட்டார். மேலும் மூவரும் தலா ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தவறினால், அவர்கள் மேலும் மூன்று நாட்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தண்டிக்காமல் விட்டால் தவறான உதாரணமாகும்
நீதிமன்றத்தின் உத்தரவைத் தோற்கடிக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளை மேற்கோள் காட்டிய நீதிபதி, “அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவது நியாயமற்றது என்பதால் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை பல ஆண்டுகளாக அமல்படுத்தாமல், நீதிமன்றத்தின் முன் ஆஜராகுமாறு உத்தரவிட்ட பிறகே நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தும் இதுபோன்ற அதிகாரிகளின் மெத்தனப் போக்கை தண்டிக்காமல் விட்டால், அது அரசு அதிகாரிகளுக்கு தவறான படிப்பினைகளை வழங்கும்," என்றார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் 2020ஆம் ஆண்டு தாக்கல் செய்த அவமதிப்பு மனுவை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
வழக்கின் பின்னனி
மனுதாரர், 1966ல் துப்புரவு பணியாளராக நியமிக்கப்பட்டு, ஊலியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முழு நேர ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். 2006 இல், அவர் கிட்டத்தட்ட 40 வருட சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றார். ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம், ஊதிய உயர்வு, விடுப்பு, ஓய்வூதியம் மற்றும் பிற ஓய்வூதிய பலன்களை ஓய்வின்போது தர, அரசு ஊழியர்களுக்கு இணையாக கொண்டு வர மாநில அரசு GO இயற்றியுள்ளது என்று மனுதாரர் கூறினார். ஆனால் அவருக்கு அது மறுக்கப்பட்டதால், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையும் பரிசீலிக்கப்படாததால், அவர் 2007 இல் நீதிமன்றத்தை நாடினார். 2012 இல், ஒரு தனி நீதிபதி அவரது அவருக்கு பென்ஷன் பலன்களை நீட்டிக்கவும் மற்ற ஓய்வுக்கு பிறகான வசதிகளை செய்து தரவும் உத்தரவிட்டார். அந்த உத்தரவை நிறைவேற்றாததால், தற்போது அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தார்.
சாடிய நீதிபதி
நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, அதிகாரிகள் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பட்டு தேவானந்த், 2012 இல் மனுதாரருக்கு ஆதரவாக ஒரு தனி பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தாலும், அதைக் கடைப்பிடிக்காமல், 2013 ஆம் ஆண்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். "ஆகஸ்ட் 2019 இல் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பின்பும் அதிகாரிகள் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவைத் தோற்கடிக்க அதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டனர். 2021 இல், மேல்முறையீடு வழக்கு நிற்காது என்று தெரிந்தே, அந்த அவமதிப்பு வழக்கிற்கும் மேல்முறையீடு செய்தனர். ஜூலை 18, 2023 அன்று அவமதிப்பு மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு, சட்டப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரே, அவர்கள் ஜூலை 24, 2023 அன்று நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்கினர்," என்று நீதிபதி தெரிவித்தார்.