வ. உ.சி. பிறந்தநாளான இன்று, அவரது சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்திய சீமான் தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்தித்தார்.


அப்போது பேசிய அவர், “உலகத்திற்கே தெரியும் ‘அக்னி கலசம்’ வன்னியர் சங்கத்தின் முத்திரை என்பது. அதை ஏன், ஜெய்பீம் படத்தில் வைக்க வேண்டும்..? அந்த முத்திரியை படத்தில் வைக்காமல் தவிர்த்திருக்கலாம். பாதிக்கப்பட்ட குறவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது வன்னியர் இன மக்கள்தான்  அவர்களை ஏன் தவறாக படத்தில் காட்ட வேண்டும். வன்னியர்களின் அடையாளமான ‘அக்னி கலசம்’ ஜெய்பீம் படத்தில் வைக்கப்பட்டது சூர்யாவுக்கே தெரிந்திருக்காது. அவரை எட்டி உதைக்க சொன்ன பாமக பிரமுகரை, நீங்கள் யாரேனும் எட்டி உதையுங்கள் உங்களுக்கு நான் பணம் தருகிறேன். அன்புமணி சூர்யாவுக்கு எழுதிய கடிதத்தில் இருந்த வலியும் உண்மையையும் மறுக்க முடியாது” என்று பேசினார். இந்தப் பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


முன்னதாக, ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெய்பீம். பத்திரிகையாளர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் சமூகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது. மேலும் அதிகாரவர்க்கத்தின் கோர முகத்தை எந்தவித ஒளிவு மறைவுமின்றி மக்களிடம் எடுத்து வைத்திருக்கிறது.


 


ஆனால் ஜெய்பீம் படம் வன்னியர் சமுதாயத்தை இழிவுப்படுத்திவிட்டதாக வன்னியர் சங்கம் சார்பாக சூர்யா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


அதுமட்டுமின்றி சூர்யா எங்கும் நடமாட முடியாது எனவும், அவரை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் பாமக மாவட்ட செயலாளர் பேசியதும், அதற்கு ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் மௌனம் காப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூர்யா மீது வன்னியர்கள் தரப்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், அமீர், வெற்றிமாறன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். நடிகர்களில் கருணாஸ், சத்யராஜ் உள்ளிட்டோரை தவிர்த்து சூர்யாவின் சமகால நடிகர்கள் இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை.


இந்நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து மௌனம் காத்துவந்த சூர்யா  ட்வீட் செய்த சூர்யா“அன்பர்களே, #Jaibhim மீதான இந்த அன்பு அலாதியானது. இதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி” என குறிப்பிட்டார்.