இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்திலும், நடிகர் சூர்யா நடிப்பிலும் தயாரிப்பிலும் சமீபத்தில் வெளியானது `ஜெய் பீம்’ திரைப்படம். அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியான இந்தத் திரைப்படம் தமிழ்நாட்டில் வாழும் இருளர் பழங்குடியினர் மீதான காவல்துறையினரின் அடக்குமுறை குறித்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தில் காட்டப்பட்டிருந்த காவல்துறை அதிகாரியின் வீட்டில் வன்னியர்களின் சாதிச் சின்னம் இருந்ததாக சர்ச்சைகள் எழுந்தது. அதனையடுத்து படத்தின் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் அந்தக் காட்சியில் சர்ச்சைக்குரிய அந்தப் பகுதிகளை மாற்றியதாக அறிவித்தார். எனினும் வன்னியர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியதாக பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்கம் முதலான அமைப்புகள் நடிகர் சூர்யா நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என `ஜெய் பீம்’ படத்தையும், நடிகர் சூர்யாவையும் கடுமையாக எதிர்த்து வந்தனர்.


இதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா அன்புமணி ராமதாஸ் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகக் கடிதம் ஒன்றை வெளியிட்டார். மேலும், `ஜெய் பீம்’ படத்திற்கு ஆதரவு அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முதலானோருக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதினார் நடிகர் சூர்யா. அதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா மீதான சர்ச்சைகளில் அவருடன் நிற்பதாகத் திரைப் பிரபலங்களான இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் பாரதி ராஜா, இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சத்யராஜ்,  டிராஜேந்தர், அமீர்  உள்ளிட்ட பலர் தங்களது ஆதரவு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்




இயக்குநர் வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், `சரியான செயலைச் செய்ததற்காக யாரையும் குறைவாக எண்ணிச் செய்யக் கூடாது. நட்சத்திர அந்தஸ்தை வேறு விதமாக மாற்றும் ஒரு நட்சத்திரம், சூர்யா’ என்று குறிப்பிட்டுள்ளார். 


வெற்றி மாறனின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள லோகேஷ் கனகராஜ், சூர்யாவுடன் ஆதரவாக நிற்கிறோம். படக்குழுவுக்கு ஆதரவாக நிற்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.


ஜெய்பீம் குறித்து அன்புமணி ராமதாஸுக்கு கடிதம் எழுதிய இயக்குநர் பாரதிராஜா, ஜெய்பீம்’. அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.  சூர்யாவை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும் அவர் மீதான வன்மத்தையும் வன்முறையை ஏவிவிடுவதும் மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டுவர உதவும். சினிமாவை விட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வரவேண்டாமே எனக் குறிப்பிட்டார்.


சூர்யாவுக்கு ஆதரவாக அறிக்கைவிட்டுள்ள கருணாஸ், சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் எந்த சமூகத்தையும் தவறாக காட்டவில்லை. அப்படியும் அவர்கள் சுட்டிக் காட்டிய அந்த காலண்டர் சீனை நீக்கியும் இப்படி பிரச்சனை செய்வது பப்ளிசிட்டி ஸ்டன்ட்  எனக் குறிப்பிட்டுள்ளார்.




ஜெய்பீம் படக்குழுவுக்கு தன்னுடைய ஆதரவு வார்த்தைகளை குறிப்பிட்டுள்ள அமீர், 
சமூகநீதியை நிலைநாட்ட வற்பறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் "ஜெய்பீம்" படக்குழுவினருடன் எப்போதும் நான்.. எனக் குறிப்பிட்டுள்ளார்


இதுகுறித்து கண்டன அறிக்கை விடுத்துள்ள டி ராஜேந்தர், '‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் தவறான காட்சி இருப்பதாக கூறி இருந்ததால், அந்த காட்சி உடனே படக்குழுவினரால் நீக்கப்பட்டது. அந்த முத்திரை இடம்பெற்றதற்கு சூர்யாவுக்கு சம்பந்தம் இல்லை.இதனால் உங்கள் கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.இது நியாயம் இல்லை.இந்த செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அரசியல்,ஜாதி,மத,இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன் விளிம்பு நிலை மாணவர்கள் மீது அக்கறை கொண்டு கல்வி பணியாற்றும் சூர்யா அவர்களை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஜெய்பீமுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த பிசி ஸ்ரீராம், 'நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை நாம் அலட்சியமாக இருக்க முடியாது. சில விஷயங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 




சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் சத்யராஜ், '' பாரதிராஜா மிக அற்புதமாகச் சொல்லியிருக்கார். திரைக்கலைஞர்களுக்கு வேறு சில காரணங்களுக்காக ஒரு படத்திற்குப் பிரச்சனை வந்தால், அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும்போது, சமூக மாற்றத்திற்காகக் குரல் கொடுக்கும்போது, பிரச்சனைகள் வரும்போது, கலை உலகத்தைச் சார்ந்தவர்கள் எல்லோரும் முன்நிற்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். அந்த வகையில், இயக்குநர் பாரதிராஜா அவர்கள் முன்மொழிந்ததை, நான் அப்படியே வழிமொழிகிறேன். நன்றி! வணக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இன்னும் பல சினிமாத்துறையினர் சூர்யாவுக்கும், ஜெய்பீம் படக்குழுவுக்கும் ஆதரவாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்


இயக்குநர்களும், மூத்த நடிகர்களும் மட்டுமே குரல் கொடுத்துள்ள நிலையில் சூர்யா கால சக நடிகர்கள் இது குறித்து இதுவரை வாயை திறக்கவில்லை என ட்விட்டரில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. ரஜினி, கமல்,  அஜித், விஜய், தனுஷ், கார்த்தி, ஆர்யா, சிம்பு, விஷால் உள்ளிட்ட யாருமே இதுவரை ஜெய்பீம் விவகாரம் குறித்து பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.