சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி நரிக்குறவர் பகுதிக்கு வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார்.நரிக்குறவர் பகுதியை பார்வையிட்டு 81 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினார். அப்போது சில நாட்களுக்கு முன்பாக கோவிலில் உணவு மறுக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த அஸ்வினி இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் இன மக்கள் குடியிருப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது பாசிமலை, சால்வை அணிவித்து தங்களது நன்றியை முதல்வருக்கு நரிக்குறவர், இருளர் மக்கள் கூறினார். 




பூர்வகுடிகளான நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துக்கொடுக்கவேண்டும்  என்றும் அவர்களை சுயமரியாதையுடன் நடத்தவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அம்மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் அந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் அனைத்து அத்தியாவசிய பணிகளும் ஒரு வாரத்தில் செய்து முடிக்க வேண்டுமென அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.




இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி!
சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு. அதனைத்தான், "நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார். திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே! ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது. பூஞ்சேரி கிராமத்து இருளர் & குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, நலவாரிய அடையாளச் சான்றிதழ், பயிற்சி சான்றிதழ், வங்கிக்கடன்கள் ஆகியவற்றை வழங்கினேன். இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது! இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன். இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது! 'பெரியார் - அண்ணா - கலைஞர்' ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்” என பதிவிட்டுள்ளார்.