ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.


உயர்ந்த தக்காளி விலை: 


கடந்த சில நாட்களாக வரத்து குறைவின் காரணமாக தக்காளியின் விலை எக்குத்தப்பாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தொடர்ந்து விலை உயர்வால் இன்று  ஒரு கிலோ தக்காளி 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் சில்லரை கடைகளில் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி சில்லரை கடைகளில் 120 முதல் 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


எகிறப்போகும் வெங்காயத்தின் விலை: 


தக்காளியின் விலை உயர்வது போலவே வெங்காயத்தின் விரையும் விரைவில் உயரும் என வியாபாரிகள் சங்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து தான் வெங்காயம் முக்கியமாக தமிழ்நாட்டிற்கு வரும். கோயம்பேடு மார்க்கெட்டில் ஆந்திரா வெங்காயம், மகாராஷ்டிரா வெங்காயம் என இரு வகைகளாக விற்பனை செய்யப்படும். தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய  வெங்காயம் 21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


காரணம் என்ன? 


தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை கொட்டுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த வெங்காயம் தண்ணீரில் மூழ்கின. இதனால் விளைச்சல் என்பது குறைந்துள்ளது.


கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய வெங்காயம் குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வரத்து குறைவால் விலை அதிகரிப்பது இயல்பு தான். இந்நிலையில் அடுத்த சில தினங்களில் பெரிய வெங்காயம் வரத்து குறையும் என்பதால், தக்களியை போலவே விலை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படலாம். தக்காளி விலையை கேட்டு மக்கள் அதிர்ந்து போன நிலை அடுத்து வெங்காய விலையும் படிப்படியாக உயரக்கூடும் என்ற செய்தி மக்களை பேரதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது.