உலகம் முழுவதும் வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் என தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வருகின்றனர். பலரும் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். அதே சமயம் ரயிலில் டிக்கெட் கிடைக்காத  நபர்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வார்கள். இதற்காக அரசு தரப்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.


அதேசமயம் வழக்கமாக இயக்கப்படும் எஸ்.இ.டி.சி எனப்படும் அரசு விரைவு சொகுசு பேருந்துகளில் டிக்கெட்டுகள் முன்பதிவு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. அதிலும் 90% டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், ““நடப்பாண்டு தீபாவளிக்கு நவம்பர் 9,10, 11 ஆகிய தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மாதவரம் புதிய பேருந்து நிலையம், கலைஞர் கருணாநிதி மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு நாளும் சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 2100 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட 3 நாட்களில் கூடுதலாக 4, 675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.


நவம்பர் 9 ஆம் தேதி 3,465 பேருந்துகளும், 10 ஆம் தேதி 3,995 பேருந்துகளும், 11 ஆம் தேதி 3,515 பேருந்துகள் என 10,975 பேருந்துகள் இயக்கப்படும்.  அதேபோல் பிற ஊர்களில் இருந்து 5,920 பேருந்துகள் என மொத்தமாக 3 தினங்களில் மட்டும் 16 ஆயிரத்து 895 பேருந்துகள் இயக்கப்படும். டிக்கெட்டை எளிதாக முன்பதிவு செய்ய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் ஒரு மையமும் என 10 மையங்கள் திறக்கப்பட்டு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார். அதேபோன்று தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் பயணிகள் திரும்புவதற்காக 13 ஆம் தேதி 3,375 பேருந்துகளும், 14 ஆம் தேதி 3,075 பேருந்துகளும், 15 ஆம் தேதி 3,017 பேருந்துகளும் சென்னைக்கு இயக்கப்படுகிறது. மற்ற இடங்களுக்கு 3,825 பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


அதன்படி, வரும் 9 ஆம் தேதி பயணம் மேற்கொள்ள, 22 ஆயிரம் பேர், 10 ஆம் தேதி 43 ஆயிரம் பேர், 11 ஆம் தேதி 17 ஆயிரம் பேர் என மொத்தம் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னையில் இருந்து 10 ஆம் தேதி 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதற்கு 12 ஆம் தேதி 5 ஆயிரம் பேரும், 13 ஆம் தேதி 26 ஆயிரம் பேர், 14 ஆம் தேதி 16 ஆயிரம் பேரும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


அதேபோல் பயணிகள் நலனுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்றும் பயணிகள் பேருந்து குறித்த தகவல்களை அறிந்து கொள்ள 20 இடங்களில் தகவல் மையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய பேருந்து நிலையங்களுக்கு செல்ல வசதியாக கோயம்பேடு ரயில் நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


TN Rain Alert: காலை 10 மணிவரை 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்? தற்போதைய மழை நிலவரம்..