கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் போட்டியிட்டார். அப்போது, இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மல்லிப்பட்டினத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக அவர் சென்ற போது வன்முறை நிகழ்ந்தது.
இந்த வன்முறையில் இயந்திர படகுகள், வாகனங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. இதற்கு, இழப்பீடு மற்றும் நீதி விசாரணை கோரி ஹபீப்முகமது என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
‘மாமன்னன்’ திரைப்படத்தை மேற்கோள் காட்டி பேசிய நீதிபதி:
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், விசாரணைக்கு எடுத்து கொண்டார். அப்போது, ‘மாமன்னன்’ திரைப்படத்தை மேற்கோள் காட்டி பேசிய அவர், "படத்தில் நடிகர் வடிவேல் சட்டப்பேரவை உறுப்பினராக வருவார். தேர்தலில் போட்டியிடுவார். அவரை தேர்தலில் வீழ்த்த எதிர்தரப்பினர் வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்துவர்.
வடிவேலுவால் பரப்புரைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும். அவர் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுவார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு தொழில்நுட்பம் கைகொடுக்கும். சமூக வலை தளங்கள் வழியாக அவர் வாக்காளர்களை சென்றடைவார். இதே போன்ற சூழ்நிலையை 2014 மக்களவைத் தேர்தலில் கருப்பு முருகானந்தம் சந்தித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு, ஏப்ரல் 4ஆம் தேதி, மல்லிப்பட்டினம் கிராமத்துக்குப் பரப்புரைக்கு சென்றபோது கிராமத்துக்கு வெளியே ரகுமான்கான் தலைமையில் இஸ்லாமியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். தேர்தலில் வாக்களிப்பது சட்டப்படியான உரிமை. அதேபோல, வாக்கு கேட்பது அடிப்படை உரிமை.
"தேர்தல் பிரச்சாரத்தை செய்ய விடாமல் தடுப்பது குற்றம்"
நமது அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் ஜனநாயகம் தான். தேர்தலில் போட்டியிடுபவர்கள் பல்வேறு வழிகளில் வாக்குகளை சேகரிக்கின்றனர். கட்சிகளும், வேட்பாளர்களும் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி வாக்குகளை சேகரிக்கின்றனர். இவற்றை தடுப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றமாகும்.
வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க உரிமை உண்டு. அவர்களால் அமைதியான முறையில் வாக்கு கேட்கவும், எந்த இடத்துக்கும் செல்லவும் முடியும். இதை தடுக்க எந்த தனிநபர்களுக்கும் உரிமையில்லை. தேர்தல் இல்லாமல் ஜனநாயகம் இல்லை.
சுதந்திரமான, வலுவான பிரச்சாரம் இல்லாவிட்டால் தேர்தல் கேலி கூத்தாகிவிடும். வேட்பாளர்கள், கட்சிகளை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த வழக்கில் சில சூழ்நிலைகளில் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியும்.
அதற்கு முன்னதாக உண்மையை ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள், எதிர் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் கீழமை நீதிமன்றம் தான் முடிவெடுக்க முடியும். எனவே மனுதாரர் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை முடிவில் இழப்பீடு கோரி மனுத் தாக்கல் செய்ய உரிமை வழங்கப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்றார்.