அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் , பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஓபிஎஸ் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமியால் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு குறித்து அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம் கூறுகையில், ”ஓபிஎஸ் தரப்பிற்கு இது பெரும் பின்னடைவு தான். எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக அறிவிப்பதில் இனி எந்த தடையும் இல்லை. ஓபிஎஸ் தரப்பு இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றோ அல்லது நாளையோ மேல் முறையீட்டுக்கு செல்வார்கள். அப்படி செல்லவில்லை என்றால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டால் இனி வரும் வழக்குகளில் அவர் அதிமுக பொதுச்செயலாளராக பங்கேற்பார். அதிமுகவில் இது பெரும் திருப்பம் தான். ஓபிஎஸ் தரப்பு பொறுத்தவரை சட்ட வாய்ப்பை மட்டும்தான் பார்க்கிறது. ஆனால் அவர் மக்களை நாடி செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் ஓபிஎஸ் தரப்பு வைத்தியலிங்கம் இந்த தீர்ப்பை பற்றி கூறுகையில், “இந்த தீர்ப்பு நாங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. நிச்சயம் மேல்முறையீட்டில் வெற்றி பெறுவோம். இது தான் இறுதி தீர்ப்பு என சொல்ல முடியாது. தற்காலிக மகிழ்ச்சி தான் அவர்களுக்கு. இது வெகு நாள் நீடிக்காது. ஒற்றை நீதிபதி சொன்ன தீர்ப்பு இறுதியாகாது. நிச்சயம் மேல் முறையீடுட்டில் நல்ல தீர்ப்பு வரும்”, என கூறியுள்ளார்.