தமிழ்நாடு அரசின் 2023 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திருவள்ளுவர் விருது மற்றும் 9 விருதுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: 2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022 ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப் பட்டு உள்ளன. வரும் 16ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகள் வழங்குகிறார்.


விருது பெறுபவர்களின் விவரம் :


திருவள்ளுவர் விருது - இரணியன் நா.கு.பொன்னுசாமி:


சங்க இலக்கியத்தில் சமூக அறம், புலரும் (கவிதை). காற்றும் துடுப்பும் (கவிதை), தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம், தேசிய இன விடுதலையும் சிறுபான்மையினர் உரிமையும், தமிழ்ப் பாட்டாளியரின் உயிர்ப்பு ஆகிய நூல்களைப் படைத்தவர்.


கோவையில் திருவள்ளுவர் பேரவை என்ற அமைப்பை 1995 திசம்பர் 3ஆம் நாள் சிங்காநல்லூரில் தொடங்கி திருக்குறள் வாழ்வியல் நூலாகக் கற்பித்தல், திருக்குறள் மாநாடுகள், திருக்குறள் தொடர் சொற்பொழிவுகள், மாணவர்களுக்கான திருக்குறள் போட்டிகள் நிகழ்த்துதல், சமூக விடிவுக்கான ஒரு வாழ்வியல் நூலாகத் திருக்குறளை மக்கள் சிந்தனைக்கு முன்வைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருபவர்,


பேரறிஞர் அண்ணா விருது - உபயதுல்லா பெருந்தலைவர்:


எண்ணப்பூக்கள், வண்ணங்கள், தூறல், தோரணம், சின்னஞ்சிறு கண்மணிகளுக்கு, அலைகள். கதம்பம் முதலான தலைப்புகளுடன் கூடிய தன்னம்பிக்கை ஊட்டும் கையடக்க நூல்களை வெளியிட்டுள்ளார்.


தஞ்சையில் இலக்கியம் மற்றும் சமுதாயப் பணியாற்றிய சான்றோர்களைப் பற்றிய நூல்களையும் தொகுத்துப் பதிப்பித்துள்ளார். தஞ்சையில் வணிக நிறுவனங்களை நிறுவிப் பலருக்கும் வேலை வாய்ப்பை வழங்கியவர்.


காமராசர் விருது - ஈ.வெ.கி.ச இளங்கோவன்:


1984-1987 வரை சத்தியமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்று 2009ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். மேலும், ஒன்றிய அரசின் பெட்ரோலியம், தொழில் மற்றும் வர்த்தகம், ஜவுளித் துறை ஆகிய துறைகளில் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். இரண்டு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் ஒரு முறை செயல் தலைவராகவும் பதவி வகித்தவர்.


திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் அரும் பணியினைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் "காமராசர் விருது" வழங்கி, இரண்டு இலட்சம் உரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கிச் சிறப்பிக்கின்றது.


மகாகவி பாரதியார் விருது - டாக்டர் இ.ரா.வேங்கடாசலபதி:


பாரதி: கவிஞனும் காப்புரிமையும் என்ற நூலின் வாயிலாக பாரதியைக் குறித்து அறியப்படாத பல தகவல்களை நுண்ணிய வரலாற்றுப் பின்னணியுடனும் சமூகக் கண்ணோட்டத்துடனும் வரைந்த பெருமைக்குரியவர் இவர் எழுதுகின்ற ஆய்வு நூல்கள் அனைவரும் படிக்கும் வகையில் புதின நடையில் அமையப்பெறுவது இவரின் நூலாக்கத்தின் தனிச் சிறப்பாகும்.


பாவேந்தர் பாரதிதாசன் விருது -வாலாஜா வல்லவன் :


பாவேந்தர் பாரதிதாசன் தொடக்க காலத்தில் எழுதிக் குவித்தப் புதுவை முரசு இதழ் தொகுப்பை 2400 பக்கங்களில் வெளியிட்டவர். ஆதி திராவிடர் மாநாடுகள் எனும் நூலையும் தொகுத்து வெளியிட்டவர். ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்று குறிப்புகள் மற்றும் எம்.சி.ராசா வாழ்க்கைச் சுருக்கமும் எழுத்தும் பேச்சும் ஆகிய நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டவர்.


அண்ணல் அம்பேத்கர், பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் 43 நாள்கள் தொடர் கூட்டங்களை நடத்தி உரையாற்றியவர். திராவிடர் இயக்க வரலாறு, இட ஒதுக்கீடு தொடர்பான பயிலரங்கில் பாடம் நடத்தி வருகிறார்.


திரு.வி.க.விருது நாமக்கல் - பொ.வேல்சாமி:


தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தினமணி, காலச்சுவடு, தீராநதி, உங்கள் நூலகம், கவிதாசரண், புத்தகம் பேசுது உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1990களில் தமிழ்ச் சூழலில் மிகப் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிறப்பிரிகை இதழின் ஆசிரியர் குழுவில் அமார்க்ஸ், ரவிக்குமார் ஆகியோரோடு இணைந்து இயங்கியவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரவாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கமாகும்.


கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - கவிஞர் மு.மேத்தா:


நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தேன்சொட்டும் பாடல்களை எழுதிய பெருமைக்குரியவர். தமிழ்க் கவிதை வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். இவரின் கவிதைப் பாதையைப் பின்பற்றி ஏராளமான இளங் கவிஞர்கள் உருவாகியுள்ளனர். தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் இவர் எழுதிய பாட்டு. தமிழ்ப் பகைவர்களுக்கு வேட்டு எனப் பலர் போற்றுதலுக்கு உரியவராவார்.


பெரியார் விருது - கவிஞர் கலி.பூங்குன்றன்:


தந்தை பெரியாரின் கொள்கைகளான சமூக நீதி, சாதி மறுப்பு. சுய மரியாதை, பெண் கல்வி மற்றும் பெண் உரிமைகளை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்பதிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.


சமூக நீதிக்காக தொடர்ந்து ஆற்றி வரும் சீரிய பணிகளை பாராட்டும் வகையில் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டிற்கான "தந்தை பெரியார் விருது” அளித்து, ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும். தங்கப் பதக்கத்தையும், தகுதியுரையையும் வழங்கிச் சிறப்பிக்கின்றது.


அண்ணல் அம்பேத்கர் விருது - எஸ்.வி.ராஜதுரை:


இவர் எண்பத்து ஐந்துக்கு மேற்பட்ட நுல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நுல்களில் தீண்டாமை கொடுமைக்கு எதிராக கட்டுரைகள் எழுயுள்ளது குறிப்பிடத்தக்கவை.


தொடர்ந்து சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவருக்கு 2022ஆம் ஆண்டிற்கான "டாக்டர் அம்பேத்கர் விருது" மற்றும் விருதுத்தொகையாக ரூபாய் ஐந்து இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி தமிழ்நாடு அரசு பாரட்டிச் சிறப்பிக்கின்றது.


தேவநேயப் பாவாணர் விருது - முனைவர் இரா. மதிவாணன்:


ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கிரேக்க நாடகத்தில் 22 தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளமையையும் வெளிப்படுத்தியவர். தொல்காப்பியம் அரங்கேறிய காலம் கி.மு. 835 என்று சான்றுடன் நிறுவியவர். கி.மு. 3000-இல் நியூகினியாவுக்கு அருகிலுள்ள சாலமன் தீவில் இயற்கையாக விளைந்த கரும்பினைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்த மன்னன் அதியஞ்சேரல் என்ற வரலாற்றை வெளிப்படுத்தியவர்.