CM Stalin On michaung: 4000 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றும் சென்னை மிதப்பதாக, எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.


ரூ.4,000 கோடி செலவு செய்தும் சென்னை மிதக்கிறதா?


சென்னை நேரு ஸ்டேடியம் பின்புறமுள்ள  கண்ணப்பர் திடலில் உள்ள நிவாரண முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.  பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “4000 கோடி ரூபாய்க்கு  பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்ததால் தான், இவ்வளவு பெரிய வரலாறு காணாத, 47 வருடங்களில் இல்லாத அளவிலான மழை பெய்தும் சென்னை தப்பித்து உள்ளது. 4000 கோடி ரூபாய்க்கு திட்டமிட்டு செலவு செய்து பணிகள் நிறைவேற்றப்பட்டதால் தான் சென்னை உடனடியாக மீண்டு வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்படாத பணிகள், திமுக ஆட்சி காலத்தில் 2 ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க, 5000 கோடி ரூபாயை உடனடியாக  விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளோம். இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலும் கோரிக்கை வைப்பார்கள். கடந்த ஆட்சியில் வெள்ள பாதித்த பிறகு தான் மீட்பு பணிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் நேற்றே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது துரித கதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


சென்னை எப்போது சீராகும்?


அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கே. என். நேரு, “வெள்ள நீரை வடிப்பதற்காக 990 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், கனமழையால் மோட்டார்களே நீரில் மூழ்கிவிட்டன. அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழைநீர் தற்போது இயற்கையாகவே வடிந்து வருகிறது. அதன்பிறகு மோட்டார்களை கொண்டு தண்ணீர் வெளியேற்றப்படும். அதிக சக்தி வாய்ந்த மோட்டார்கள் கொண்டு வரப்பட உள்ளன. மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி ஒப்பந்த ஊழியர்களையும் சீரமைப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். மீனவர்களின் படகுகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.  அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்துள்ளனர். தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் பொறுத்து இருந்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு நிவாரணமும் கிடைக்கும். மின் விநியோகமும் காலையில் இருந்து தொடங்கியுள்ளது” என கூறியுள்ளார்.