தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என மக்கள் புகார் அளித்து வருகிறார்கள். முதல் டோஸ் கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும், சுகாதார நிலையங்களில் கோவிஷீல்ட் மட்டுமே இருப்பதாகவும் கோவாக்சின் போட்டுக்கொண்டவர்கள் காத்துக்கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது எனவும் பழைய மகாபலிபுரம் பகுதியின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அண்மையில் ஒரு புகார் எழுந்தது.
தமிழ்நாடு கடந்த மூன்று நாட்களில் மட்டும் 8 லட்சம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்துள்ளது அதனால் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 20 லட்சம் தடுப்பூசிகள் நமக்கு உடனடியாக தேவை என கேட்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தடுப்பூசி கையிருப்பு குறித்து அரசுத் தரப்புத் தகவல்களே முரணாக வந்துகொண்டிருக்கும் நிலையில், சுகாதார துறைச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் இதுகுறித்துக் கேட்டோம், “தற்போதைய தேவைக்கு நம்மிடம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் குறைவான தடுப்பூசிதான் செலுத்தப்படுகிறது என்பதால் தடுப்பூசி தட்டுப்பாடு என்கிற பேச்சுக்கே தமிழகத்தில் இடமில்லை. இதுபோன்ற புகார்களூக்கு தடுப்பூசி எடுத்துச் செல்வதில் ஏற்படும் தளவாடப் (Logistics) பிரச்னை காரணமாக இருக்கலாம்” என்றார்.
இந்தச் சூழல் குறித்துக் கருத்து கூறியுள்ள இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாடு செயலாளர் டாக்டர் ரவிக்குமார்,” மக்களுக்கு முதற்கட்டத் தற்காப்புத் தேவை என்பதால் முதல் டோஸ் செலுத்துவதில்தான் தற்போது மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்றும், இரண்டாவது டோஸ் குறிப்பிட்ட நாளில் கிடைக்கவில்லையென்றால் 6 முதல் 8 வாரம் வரை கூட காத்திருந்து போட்டுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். அதோடு, ஆக்சிஜன் அவசரம் போல, தடுப்பூசி அவசரம் என்கிற வரையறைக்குள் வராது. அதனால் மக்கள் இதுகுறித்துப் பதற்றப்படத் தேவையில்லை” என்றார்.
Also Read: கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் ஆபத்தானதா, அவசியமானதா ? – தொடரும் குழப்பம்..