ஒன்றிய அரசு என்ற வார்த்தை விவாதத்திற்கு உரியதாக மாறியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசு என அழைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
அப்போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஒன்றிய அரசு என்று சொல்வதை, ஏதோ சமூகக் குற்றம் போல யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அது உள்ளபடியே முழுக்க முழுக்க தவறு. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் வரி, 'இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்' என்றுதான் உள்ளது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல, மாநிலங்கள் ஒன்றுசேர்ந்தது என்பது தான் அதனுடைய பொருள். இன்னும் சிலர் அண்ணா சொல்லாததை, எங்கள் தலைவர் கருணாநிதி சொல்லாததை நாங்கள் சொல்லி வருவதாகக் சிலர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திமுகவினுடைய 1957ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே 'இந்திய யூனியன்' என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. 1963 ஜனவரி 25, நாடாளுமன்ற மாநிலங்களவையில், அண்ணா பேசுகிறபோது, குறிப்பிட்டார். “அரசினுடைய இறைமை என்பதற்கு நாம் மேற்கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது, பொதுமக்களிடம் நிலைத்துள்ளது என அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்கும் இடையே - அதாவது மாநிலங்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளது" என்றுதான் அண்ணா பேசியிருக்கிறார். ‘சமஷ்டி’ என்ற வார்த்தையை ம.பொ.சி. பயன்படுத்தியிருக்கிறார். 'வெளியேறுக மிகுதியான அதிகாரக் குவிப்பு - வருக உண்மையான கூட்டாட்சி' என்று ராஜாஜியே எழுதியிருக்கிறார்.
எனவே, ஒன்றியம் என்ற வார்த்தையைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதை நாங்கள் பயன்படுத்துகிறோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டேயிருப்போம்” எனத் தெரிவித்தார்.
ஒன்றிய அரசு என அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், "இந்தியா மாநிலங்களை பிரிக்கலாம். ஆனால் எந்த மாநிலமும் இந்தியப் பேரரசை பிரித்து விட முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்புசுந்தர் டிவிட்டரில், "மன்னிக்கவும் திரு முதலமைச்சர். இந்தியா மாநிலங்களால் ஆனது அல்ல. இதுவேறு வழி. நீங்கள் கருத்து தெரிவிக்கும் முன் கவனமாகப் படித்து புரிந்து கொள்ளுங்கள். மாநிலங்கள் இந்தியாவால் ஆனவை" எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், "இந்தியா என்கிற பாரத நாட்டின் நிர்வாக வசதிக்காகவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது போல, இந்திய அரசு நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் இரண்டு அல்லது மேலும் பல மாநிலங்களாகப் பிரிக்க முடியும். ஆனால், இந்தியா என்ற பாரத நாட்டை யாராலும் பிரிக்க முடியாது. இந்தியாவில் இருந்து பிரிகிறோம் என்று மாநிலங்கள் கூற முடியாது. அப்படிக் கூறினால் அது பிரிவினைவாதம். தேசத் துரோகம்.
எனவே, முதலமைச்சர் கூறியது போல கூட்டாட்சி தத்துவத்திற்காக ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினால் பிரச்சினையில்லை. ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதால் இந்திய அரசின் அதிகாரங்கள் குறையப்போவதில்லை. இவ்வளவு விளக்கம் அளித்த முதலமைச்சர், ‘மத்திய அரசு' என்றால் என்ன, 'ஒன்றிய அரசு' என்றால் என்ன, இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதற்கும் விளக்கம் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" எனத் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், "சட்டத்தில் இல்லாத வார்த்தையை பயன்படுத்துவது அம்பேத்கரை அவமதிக்கும் செயல். ஒன்றிய அரசு என்று சொல்வதற்கு நாங்கள் ஏன் பதற வேண்டும். மத்திய அரசை ஒன்றிய அரசு என இல்லாத சொல்லை பயன்படுத்துவது தவறான ஒன்றாகும். தமிழ்நாடு என்ன ஊராட்சி அரசா? ஸ்டாலின் என்ன ஊராட்சி முதல்வரா?" எனத் தெரிவித்தார்.
ஒன்றிய அரசு என்று சொல்வதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேசமயம் ’மாநிலங்களால் இந்தியா உருவாகவில்லை, இந்தியாவால் தான் மாநிலங்கள் உருவானது' எனப் பொருள் படும்படியான பாஜகவினரின் கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.