உதயநிதி அறக்கட்டளையின், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, அறக்கட்டளைக்கு சொந்தமான 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளையும், அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34.7 லட்சத்தையும் அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
அமலாக்கத்துறை ட்வீட்:
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “25/5/2023 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. M/S உதயநிதி அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ. 36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் மற்றும் அதுதொடர்பான வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34.7 லட்சமும் முடக்கப்பட்டுள்ளது. கல்லல் க்ரூப் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதான வழக்குகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லல் குழும மோசடி என்ன?
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் 114 கோடி ரூபாய் மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களை மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீசார் கைது செய்தனர்.
ஒப்பந்தம் கையெழுத்தானது:
சென்னையைச் சேர்ந்த கல்லல் குழுமத்துக்குச் சொந்தமான நிறுவனம், போர்ச்சுகலை சேர்ந்த பெட்டிகோ கொமர்சியோ நிறுவனத்தை முதலீடுகளுக்காக அணுகியிருந்தது . பெட்டிகோ கொமர்சியோவின் ஒரு கிளை ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப் வளாகத்தில் உள்ளது. அதன்படி, தங்களுக்கு 70% பங்கும், கல்லல் குழுமத்திற்கு 30% பங்கும் என்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. போர்ச்சுகல் நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களும், கல்லல் குழுமத்தின் இரண்டு நிறுவனர்களும் சேர்ந்து நிறுவனத்தை நடத்தலாம் என முடிவு எட்டப்பட்டது.
ஒப்பந்தங்களை மீறி மோசடி:
ஒப்பந்தங்களை மீறி கல்லல் குழுமம் செயல்படுவதாக, போர்ச்சுகல் நிறுவனம் குற்றம்சாட்டி வந்தது. போலி ஆவணங்கள் மூலம் கனிம வள வணிகத்தில் சுமார் 114 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டபட்டது. மேலும் தொழில் வளர்ச்சிக்காக கனரக வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வாங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து, இல்லாத நிறுவனத்துடன் வணிக ஒப்பந்தம் செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போர்ச்சுகல் நிறுவனத்தின் இயக்குனர் கவுரவ் சாச்ரா புகார் மனு ஒன்றை அளித்தார். அதனடிப்படையில் கல்லல் குழுமத்தின் இயக்குனர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்த நிலையில்தான், கல்லல் குழும மோசடி உள்ளிட்ட சில வழக்குகள் தொடர்பாக, உதயநிதி அறக்கட்டளையின் பெயரில் உள்ள அசையா சொத்துகள் மற்றும் வங்கிக் கணகில் இருந்த பணம் முடக்கப்பட்டுள்ளது.
M/s உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையில், பங்குதாரர்கள் யார்? உறுப்பினர்கள் யார்? என்பதைக் குறித்து எந்த விவரத்தையும் அமலாக்கத்துறை வெளியிடவில்லை..