சேலம் புத்தகத் திருவிழாவில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு "கச்சதம் என்பது கதை' என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, சேலத்து மக்கள் உழைப்புக்கு சொந்தக்காரர்கள். தருமபுரி, கிருஷ்ணகிரியில் மாம்பழம் விளைந்தாலும் அதை சந்தைப்படுத்துவதில் சேலம் சிறந்து விளங்குகிறது. சேலத்தில் மட்டும்தான் 75 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இந்தியாவிலேயே அதிகம் வெள்ளி வேலைகள் செய்கின்ற இடம். மிகவும் அழகான நல்ல சீதோஷ்ண நிலை கொண்ட சுற்றுலாத் தலம் ஏற்காடு. சேலத்தில் தஞ்சைத் தரணியை வளமாக்குகின்ற மேட்டூர் அணை இருக்கிறது. மேச்சேரியில் மானாவாரி நிலத்தில் தக்காளி, வாழையும் பயிராவது பெருமைக்குரியது. 2 ஆயிரம் ஆண்டுகளாவது பழமை வாய்ந்தது சேலம் மாநகரம் என்பதை இங்கு கண்டறியப்பட்ட ரோமானிய நாணயங்கள் உணர்த்துகின்றன.
முழுமை என்பது கற்பனை, கதை, சாத்தியமில்லை. கச்சிதமாக ஒருவர் இருக்க முடியாது என்பதே உண்மை. வாசிப்பது மட்டும் முக்கியமில்லை. புத்தகத்தை வாசிப்பதால் கருத்துக்கள், அறிவு கிடைக்கிறது. ஒரு கருத்து கிடைக்கும்போது அதிலிருந்து சங்கிலித் தொடராக மற்றொரு கருத்துக்கு அழைத்துச் செல்கிறது. நாம் ஒரு புத்தகத்தை வாசித்தால், அது நம்மை வேறொரு சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சிந்திக்கும் போது தான் புதிய கருத்துக்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கிறது. இப்படித்தான் படிப்படியாக கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன என்றார்.
மனப்பாடம் செய்வது மட்டுமே கல்வியில்லை. அதிலிருந்து சுய சிந்தனைக்கு செல்ல வேண்டும். ஒருவர் முழுமையும் அடைய முடியாது, கச்சிதமாகவும் இருக்க முடியாது என்பதை உணர்ந்தால் இருத்தலில் மகிழ்ச்சி அடைய முடியும். நிறைய பரிசுகளை வாங்கும் மாணவரை தங்களுடைய குழந்தைகளுடன் பெற்றோர் ஒப்பிடக் கூடாது. அது சாத்தியமே இல்லை. சாத்தியம் என்பது நமக்கான திறமையின் அடிப்படையில் தேடுதலில் இருக்கிறது. இயற்கை ஒவ்வொருவருக்கும் தனித்திறமையை படைத்து அனுப்பியிருக்கிறது. கச்சிதம் என்பது நடக்க முடியாத காரியம் என்பதை வரலாற்றில் நிறைய இடங்களில் பார்க்கலாம் என்று கூறினார்.
கற்பனைகளில் மட்டுமே ஒருவர் கச்சிதமாக இருக்க முடியும். ஒவ்வொரு மனிதருக்கும் ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது. நெப்போலியனுக்கு பூனை என்றால் பயம். பாம்பினை அதன் புற்றில் இருந்து எடுக்க கூடியவர், எலியை பார்த்து பயந்து நடுங்கும் சூழல் உள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒரு பயம் இருக்கிறது. குறைபாடுகள் இல்லாத மனிதரே இல்லை. குறைபாடு இல்லாமல் ஒருவர் வாழ சாத்தியமே இல்லை. கச்சிதம் என்பதற்கு ஒரு வடிவம் கொடுத்து வைத்திருக்கிறோம். கச்சிதமாக இருப்பவரோடு நட்பு கூட வைத்துக் கொள்ள முடியாது என்றார்.
எப்போது பார்த்தாலும் உங்கள் தவறை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. சுத்தமான தண்ணீருக்கு மணம் இருக்காது. சுவை இருக்காது. நிறம் இருக்காது. சுத்தமான தங்கத்தை விட சுத்தமான இரும்பை வைத்துதான் நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கினான். சுத்தமான தங்கத்தில் இருந்து நகைகளை உருவாக்கிட முடியாது. கச்சிதமான தங்கத்தை விட, கச்சிதமில்லாத தங்கத்தை வைத்துதான் நகைகளை உருவாக்கிட முடியும்.
புயல், மழை, சூறாவளி, நிலநடுக்கம் என எல்லாம் ஏற்பட கச்சிதமில்லாத உலகமே காரணம். நொடிக்கு நொடி உலகம் தன்னை புதுப்பித்துக் கொண்டேதான் இருக்கிறது. இருத்தல் தன்னை பரிணமித்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நொடிகளை, நாட்களை, ஆண்டுகளை வீணடித்துக் கொண்டே இருக்கிறது. உலகம் ஒவ்வொரு நொடியிலும் மாற்றத்தை கண்டு கொண்டிருக்க மனிதர்கள் வீணடிக்கிறார்கள். சிறந்தவை இந்த உலகில் நீடிப்பதில்லை. தாக்கு பிடிக்கும் சக்தி கொண்டவையே நீடிக்கின்றன. 4 ஆயிரம் ஆண்டுகளாக எந்த விலங்கையும் வீட்டு விலங்காக மாற்ற முடியவில்லை. விலங்குகளும் காலப் போக்கில் பரிணாம வளர்ச்சியடைந்து வருகிறது. குறைவாக மகசூல் தந்த பயிர்களை அதிக மகசூல் தருபவையாக மாற்றி இருக்கிறோம். இதுதான் இலக்கு என்று மனிதன் நிறுத்தி கொள்வதில்லை. கச்சிதமின்மையால் மனிதனின் வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் மிகச் சிறந்த ஓவியரான வேன்கா, மிகச்சிறந்த ஓவியங்களை வரை தான் முயன்று கொண்டிருப்பதாகவே தெரிவித்தார் . ஒரு சிறந்த கவிஞர் சிறந்த படைப்புகளை உருவாக்கும் முயற்சியாகவே தொடர்ந்து எழுதி வருவதாக கூறுகிறார். கவிஞர்களும் மற்றவர்களும் கச்சிதமான படைப்பை உருவாக்கும் வேட்கையில்தான் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.
வாழ்க்கையை அதன்போக்கில் எடுத்துக் கொள்ளும் மனிதர்கள்தான் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். கச்சிதம் பார்க்கும் மனிதர்கள் ரசிப்புத் தன்மையை இழந்து விடுகிறார்கள். எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அவர்கள் சரியாக இருப்பதில்லை. பதற்றத்தால் கச்சிதம் விளையாது. கச்சிதமின்மையை உணர்பவர்கள், அதன் பின்னால் இருக்கும் அன்பை நிச்சயம் உணர்வார்கள். முழுமை பெறாத சிற்பங்கள் நம்முடைய கற்பனையைத் தூண்டுகின்றன என்று பேசினார்.