சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பபட்டி வன உயிரியல் பூங்காவில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார். பூங்காவின் அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டுக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள சந்தன மர குடோனில் இருப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சேலம் மக்களின் சிறந்த சுற்றுலா தளமாக சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா விளங்குகிறது. இங்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் இந்த பூங்காவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை, இரண்டாம் நிலை வன உயிரியல் பூங்காவாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய வந்ததாக தெரிவித்தார்.
கடந்த காலங்களில் 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் சிறுபூங்காவில் இருந்து நடுத்தர பூங்காவாக தரம் உயர்த்த மத்தியஅரசிடம் இருந்து அனுமதி கிடைத்துள்ளது. மாநில அரசின் மூலமாக என்ன செய்ய முடியும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டத்திற்கு பூங்காவை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 16 வகையான அரிய வகை மரங்களை வெட்டுவதற்கு ஆணை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மரங்கள் அதிகளவில் வெட்டப்பட்டு வருகிறது. இதனை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு? புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளதாகவும், ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் அது தொடர்பாக விசாரணை நடத்தி தெரிவிக்கப்படும் என்றார்.
வனத்துறை அனுமதியில்லாமல் மரங்கள் வெட்டுவதை தடுக்க விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். யானைகளின் உயிரிழப்புகளை இழப்பை தடுப்பதற்கு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும், தொடர்ந்து ஆங்காங்கே வன உயிரினங்கள் உயிரிழக்கிறது நகருக்குள் வருவதை தடுத்து வனப்பகுதிகளுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் துரிதமாக தேவையான இடத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர் நடவடிக்கையாக வனப்பகுதிகளுக்குள் வன உயிரினங்களை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனப்பரப்பை அதிகரிக்க தமிழக முதல்வர் 23.7 சதவீதமாக இருக்கும் வனப்பரப்பை அதிகரிக்க பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக அதிகரிக்க முயற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கலில் 117 ஏக்கர் பரப்பளவில் மரம் நடுதல் நிகழ்ச்சி விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னிலையில் 6 லட்சத்து 26,000 மரகன்றுகள் நடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.
வன உயிரினங்கள் தொடர் உயிரிழப்பு, விபத்தாகவே நடைபெறுகிறது. அதை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மர்மமான முறையில் வன உயிரினங்கள் உயிரிழப்பது குறித்து அதிககவனம் செலுத்தி அதனைத் தடுக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறை சார்பாக எக்கோ டூரிஸ்ட் மூலமாக சுற்றுலா தளத்தை மேம்படுத்த தனி ஆய்வு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்து தெரிவிக்கப்படும்.
ஆய்வின் போது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.