கரூர் மாவட்டம் ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த மதுசூதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கரூர் மாவட்ட அதிமுகவின் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளேன். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதிமுகவைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக திமுகவில் சேருமாறு கட்டாயப்படுத்தி வருகிறார். அதிமுகவை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வது, அவர்களை மிரட்டுவது போன்ற செயல்கள் மூலமாக திமுகவில் சேருமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். காவல்துறையினரும் இதற்கு உடந்தையாக உள்ளனர். இதனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் அதிமுகவைச் சேர்ந்த சுமார் 40 பேர் திமுகவில் இணைந்து உள்ளனர். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர் அதிமுகவில் இணையுமாறு என்னை அணுகினர். இல்லையெனில் என் மீது போதைப் பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதாக மிரட்டினர்.



 

கடந்த நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்கு வந்த கரூர் மாவட்ட காவல்துறையினர், என்னை காரணமின்றி விசாரணைக்கு அழைத்தனர். முறையான காரணங்கள் இல்லாததால், நான் விசாரணைக்கு செல்ல மறுத்து விட்டேன். காவல்துறையினர் என் மீது தொடர்ச்சியாக பொய்வழக்கு பதிவு செய்யலாம் என அஞ்சுகிறேன்.ஆகவே காவல்துறையினர் என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர் குறிப்பிட்ட சம்பவத்தை கூறியோ, அல்லது குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவிடுமாறோ கூறவில்லை  முறையான ஆவணங்கள் ஏதுமின்றி ஒட்டுமொத்தமாக உத்தரவிடக் கோரியுள்ளார். அதுபோல உத்தரவை வழங்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்


 


சத்தீஸ்கரில் காணாமல் போன CRPF வீரரை கண்டுபிடித்து தரக்கோரிய ஆட்கொணர்வு மனு -   மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

 

ராமநாதபுரம் மாவட்டம் முமுதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் பாலமுருகன் CRPF 19ஆம் பட்டாலியனில் பணியாற்றி வந்த நிலையில், இரண்டாம் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இரவு சத்திஸ்கர் சென்று அடைந்ததாக போனில் தெரிவித்தார். தினமும் எங்களைத் தொடர்பு கொண்டு பேசும் நிலையில், கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி எனது கணவர் பணி செய்யும் இடத்தில் இருந்து என்னை அழைத்து, காலை முதல் கேம்பில் எனது கணவரை காணவில்லை என தெரிவித்தனர். இதுவரை எனது கணவரிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. CRPF 2ஆம் பட்டாலியனைச் சுற்றி முழுக்க சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், எனது கணவர் சென்றது எந்த கேமராவிலும் பதிவு பதிவாகவில்லை என குறிப்பிடுகிறார்கள். எனது கணவர் காணாமல் போன நிலையில் 2 குழந்தைகளுடன் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன். எனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் மாவோயிஸ்டுகள் நடமாடும் பகுதி என்பதால், எனது கணவர் அவர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. ஆகவே எனது கணவரை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.