சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாரம்பியம் மிக்க ABP குழுமம் சார்பில் ABP Nadu அலுவலகத்தில் மகளிர் தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 


இதைத் தொடர்ந்து அலுவலகத்தில் பணியாற்றும் ஆண்கள், பெண்கள் குறித்தும் பெண்கள் தினம் பற்றியும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். 


ஷண்முக சுந்தரம், ஆசிரியர்


’’பெண்களே இந்த உலகின் அச்சாணி. அவர்களைச் சுற்றித்தான் உலகமே இயங்குகிறது. ஆண், பெண், திருநங்கை என்ற பேதமில்லாமல் சக மனிதர்கள் அனைவரையும் மதித்தாலே போதும். 


பெற்ற தாய்க்கு சிறந்த மகனாக, மனைவிக்கு சிறந்த கணவனாக, குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாக இருப்பவர், சமுதாயத்திலும் சிறந்த மனிதராக இருப்பார். சமூகத்தில் பெண்களின் நிலையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. வருங்காலத்தில் பெண்களே உலகை ஆளும் நிலை வரும். 


சாதிக் புதுவாச்சேரி, வணிகத் துறை தலைவர்


ஆண்களைக் காட்டிலும் பெண்களே வலிமையானவர்கள். இயல்பிலேயே மன வலிமை அதிகம் கொண்ட பெண்களுக்கு ஆண்களைப் போல மாரடைப்பு வருவதில்லை. உலக அளவில் குடும்பம், கலாச்சாரம், சமயம் உள்ளிட்ட பலவற்றுக்கு பெண்களே அடிப்படைக் காரணமாக இருக்கின்றனர்.




ஜெகதீசன், மேலாளர்


மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவை. அதனினும் அரிது பெண்ணாய்ப் பிறப்பது. பெண்களே உலகை இயக்கும் சக்தி. ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என மனிதர்களில் பல வகை இருந்தாலும், அனைவரும் பூமிக்கு வருவது பெண்ணால்தான். உலகில் ஒவ்வோர் உயிரும் பெண்களால்தான் பிறக்கிறது. 


ராஜா சண்முகசுந்தரம், துணை ஆசிரியர்


மகளிர் தினத்தை இன்று கொண்டாடுகிறோம். ஆனால் மகளிரைக் கொண்டாடுகிறோமா? பெண்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஒரு நாள் மகளிர் தினம் கொண்டாடுவதால், சமூக நீதி, சமத்துவம் எல்லாம் கிடைத்துவிடுமா? 


ஓர் ஆண் சமூகத்தில் தனக்கு என்ன மாதிரியான மரியாதை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறானோ, அதே அளவிலான மதிப்பும் மரியாதையும் தாய்க்கு, தங்கைக்கு, சந்திக்கும், உடன் பணியாற்றும் பெண்களுக்குக் கிடைக்கும் வகையில் நடந்துகொள்கிறானோ, அன்றுதான் உண்மையான மகளிர் தினம். ஒட்டுமொத்த ஆண் சமூகமும் அப்படி நினைக்கும்போது மாற்றம் நடக்கும். 


ஜான் ஷ்யாம், மனிதவள மேம்பாட்டுத் துறை


வீட்டில் இருக்கும் பெண்களை முதலில் மதிக்கக் கற்றுக் கொண்டால், பிந்தைய மாற்றம் தானாக நிகழும். 


ராஜேஷ், இணை தயாரிப்பாளர்


பெண்கள் இல்லை என்றால் நிம்மதி என நினைக்கும் ஆண்கள். சிறிது நேரத்தில், பெண்கள் இல்லாமல் இருக்க முடியாது என்று உணர வைத்து விடுபவர்களே பெண்கள். அதுதான் பெண்ணின் பலம்.




கிருஷ்ணக்குமார், இணை தயாரிப்பாளர்


ஓர் ஆணால் தனித்து வாழ முடியாது. Single Parenting-ல் ஒரு தாயால் தன் குழந்தைகளைத் தனித்து வெற்றிகரமாக வளர்த்தெடுக்க முடியும். ஆனால் ஒரு தந்தையால் முடியுமா? என்றால் சந்தேகம்தான். 


பெண்களுக்கு இருக்கும் வைராக்கியமும் லட்சிய வேட்கையும் ஆண்களுக்கு இருப்பதில்லை. மன வலிமையும் ஒப்பீட்டளவில் பெண்களுக்குத்தான் அதிகம். மொத்தத்தில் குடும்பம் என்ற அமைப்பு எப்போதும் உடையாமல் இருக்க பெண்களே முக்கியக் காரணம். 


வேல் முருகன், இணைத்தயாரிப்பாளர்


பெண்களும் நம்மைப் போலவே சக மனிதர்கள்தான். ஆண் - பெண் சமத்துவம் மெல்ல மெல்ல ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதைப் போல ஏன் எங்களுக்கான தினத்தை யாரும் கொண்டாடுவதில்லை? 


முகேஷ் கண்ணன் , உதவி தயாரிப்பாளர்


எல்லாமே ஒரு நாள் கூத்துதான். குறிப்பிட்ட நாளில் மட்டுமே பெண்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கடந்துபோக நான் விரும்பவில்லை. பெண்கள் இல்லாமல், ஆண்களால் ஒரு குடும்பத்தை நடத்திவிட முடியாது.  





பேச்சி ஆவுடையப்பன், உதவி தயாரிப்பாளர்


ஆண்களும் சேர்ந்துதான் இந்த தினத்தைக் கொண்டாட வேண்டும். பெண்கள் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை பல ஆண்களுக்கு வாய்ப்பதில்லை. அந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, ஆண்கள் உதட்டளவில் இல்லாமல் உண்மையிலேயே பெண்களைக் கொண்டாடும் தினம்தான் அசலான மகளிர் தினம். 


சுகுமாறன், உதவி தயாரிப்பாளர்


பெண்ணுக்குள் அடங்கியவனே ஆண். ஆணுக்கு முன்னால் என்றுமே பெண்தான். அதுவே, Fe–male, Wo–men.


தனுஷ்யா, நிருபர்


பெண்மை பெண்களுக்கு மட்டுமே சொந்தமானதில்லை. ஆண்களுக்குள்ளும் பெண்மைத் தன்மை ஒளிந்திருக்கிறது. பெண்களுக்கு மட்டுமல்லாமல், பெண்மையைக் கொண்ட அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துகள். பெண்ணியம் பேசுவோர், பெண்மைக்கே உரிய இயல்புகளைத் தவிர்க்காமல் இருப்பது முக்கியம் என்று நினைக்கிறேன்.


முருகானந்தம், நிருபர்


பெண்கள்  அனைவரது வாழ்விலும் முக்கியமானவர்கள்... தாயாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக என ஒவ்வொருவரின் வாழ்வையும் தினந்தோறும் சிறப்பாக வழிநடத்த உறுதுணையாக இருப்பவர்கள்...


பெண் அடிமைத்தனத்தில் இருந்து சிங்கப் பெண்களாக மீண்டு வந்து தற்போது பல்வேறு துறைகளில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக் வெற்றிகளை கண்டு வரும் மகத்தான மகளிர் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்’’. 


இதை வாசித்த ஆண்கள், பெண்கள் உட்பட அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துகள்.