பாஜகவில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் அதிமுகவில் இணைவது குறித்து முன்னாள் அமைச்சர் செம்மலை ஏபிபி நாடுவிற்கு எக்ஸ்க்ளூசிவாக பேட்டியளித்தார்.  அந்த பேட்டியில், “அரசியலில் இது ஒன்றும் புதிதல்ல, பிஜேபியிலிருந்துதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பல அரசியல் கட்சிகளிலிருந்து அவர்களுக்கு பிடித்த இயக்கத்தில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். 


இன்னும் சொல்ல போனால் எங்களுடைய இயக்கத்தில் இருந்து கூட விலகி, திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்திருக்கிறார்கள், பிஜேபியில் இணைந்திருக்கிறார்கள். எனவே, பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்சிகளில் கொள்கை அல்லது நடவடிக்கை பிடிக்காமல் தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு செல்வார்கள். இது ஒன்றும் புதிதல்ல. எனவே, பிஜேபியில் இருந்து மட்டும்தான் அதிமுகவிற்கு வருகிறார்கள் என்று சொல்வது சரியாக இருக்காது. இதை பெரிதும் படுத்தக்கூடாது.” என்று தெரிவித்தார்.  


தொடர்ந்து பேசிய அவர், “ஒரு தேசிய கட்சியிலிருந்து, அதுவும் இந்தியாவை ஆளுகின்ற ஒரு தேசிய கட்சியிலிருந்து எங்களுடைய இயக்கத்தை நாடி, பொறுப்பாளர்கள் வருகிறார்கள் என்றால் அது எங்கள் இயக்கத்தின் மீதுள்ள நம்பிக்கை என்று எடுத்து கொள்ளலாம். எனவே வருபவர்களை ஏற்றுகொள்வது எங்கள் கட்சியின் தலைமை கடமை என்று கருதுகிறேன். 


எந்த கட்சியிலிருந்தும் ஆட்களை இழுப்பதோ, வற்புறுத்தல் செய்தோ வரவைப்பது எங்களது பழக்கம் இல்லை. அவர்களாக பிரியப்பட்டு, அவர்களாக இஷ்டப்பட்டு வருகிறார்கள். வருகிறவர்களை வரவேற்கிறோம்.” என்றார்.  


அதிமுக கூட்டணி தர்மத்தை மீறியதா..? 


அதிமுக கூட்டணி தர்மத்தை மீறியதா என்ற கேள்விக்கு பதிலளித்த செம்மலை, “கூட்டணி என்று எப்படி சொல்லுகிறீர்கள் என்று புரியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜகவும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி வைத்தது உண்மைதான். ஆனால், அதற்கு பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அவர்களும் தனித்து நின்றார்கள். நாங்களும் தனித்து நின்றோம். எனவே கூட்டணி தொடர்கிறது என்று வைத்துகொள்ள கூடாது. கூட்டணி என்பது தேர்தலுக்கு தேர்தல் அந்தந்த கட்சிகள் இணைந்து செயல்படுவதுதான். இதனால் பிஜேபியுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்று எடுத்துக்கொள்ள கூடாது. இது சரியும் அல்ல.” என்றார். 


மூத்த தலைவர்களுடன் தன்னை ஒப்பிட்டு கொண்ட அண்ணாமலை: 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா உடன் தன்னை ஒப்பிட்டு கொண்ட அண்ணாமலை குறித்த கேள்விக்கு பதிலளித்த செம்மலை, “ அண்ணாமலை தமிழக பாஜகவின் மாநில தலைவர். அவர் பிஜேபியின் தலைவரல்ல. ஒரு கட்சியின் தலைவர் என்று சொன்னால் அந்த கட்சியை உருவாக்கியவராக இருக்க வேண்டும் அல்லது முழு தலைமை ஏற்று நடத்துபவராக இருக்க வேண்டும். உதாரணமாக, பொதுச்செயலாளர் என்று ஏற்று கொள்ளமுடியும். பிஜேபியின் தற்போதைய தலைவர் ஜே.பி. நட்டா மட்டும்தான். அவர்தான் தேசிய தலைவர். அதன்பிறகு பிரதமர் மோடியை தலைவராக ஏற்றுகொள்ளலாம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவது ஏற்றுகொள்ள முடியாது. 


அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பாளர்தான். பிஜேபிக்கே தலைவர் இல்லை.” என்று தெரிவித்தார்.