இந்தியாவிலேயே அதிக தூரம் சென்று கடலில் தங்கி மீன்பிடிப்பு தொழில் ஈடுபடும் மீனவர் குமரி மாவட்டத்தை சேர்ந்த தூத்தூர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தான். அதிலும் இவர்கள் ஒருமுறை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றால் சுமார் 30 முதல் 60 நாட்கள் வரை ஆழ்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்க கூடிய திறன் கொண்டவர்கள். இவர்கள் பெரும்பாலானோர் குமரி மாவட்டத்தில் உள்ள தேங்காய்பட்டனம், கேரளாவின் கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க செல்வது வழக்கம் அப்படி மீன்பிடிக்க செல்லும்போது சர்வ சாதாரணமாக 400 முதல் 600 கடல் மைல் தொலைவு வரை மீன்பிடி தொழில் செய்வார்கள்.

 



 

இதனால் பல முறை அண்டை நாடுகளில் உள்ள கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடிததாக கைது செய்யப்படும் நிலையில் தற்போது  கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 8 மீனவர்கள் அந்தமான் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். மேரி என்ற படகில், ஜாஷின் தாஸ், இம்மானுவேல், சிஜின் உட்பட 8 மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இந்தோனிசிய கடற்படையினர் குமரி மாவட்ட மீனவர்களின் படகை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

 



 

படகில் இருந்த 8 மீனவர்களையும் இந்தோனேசியா துறைமுகப்பகுதிக்கு கொண்டு சென்று எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக  வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மீனவர்களின் உறவினர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது மீனவ அமைப்புகளுடன் இணைந்து கைதாகி உள்ள மீனவர்கள் மீட்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.