இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. 


தமிழக சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் திருந்தி வாழவும் அரசு தரப்பில் பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். கைதிகளுக்கு சிறைத்துரை சார்பாக மழைகாலத்தில் பயன்படும் ஆடை தயாரித்தல், பூச்செடி தயாரித்தம், உரம் உற்பத்தி செய்தல், தோல் பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளும், பள்ளி முதல் மேற்படிப்புகளை தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


இதன் ஒரு பகுதியாக, தமிழக சிறைத்துறையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து சிறை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்கை திறந்துள்ளன. சென்னை புழல், வேலூர், கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள மத்திய சிறைச்சாலை அருகே இந்த பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 5 பெட்ரோல் பங்குகளிலும் ஆண் கைதிகள் வேலைப்பார்த்து வருகின்றனர். தண்டனை பெற்ற கைதிகள் பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பதுடன், மாதந்தோறும் அவர்களுக்கான சம்பளமும் வழங்கப்படுகிறது. 


இதன் தொடர்ச்சியாக தற்போது, பெண் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. சிறைத்துறையுடன் இணைந்து செயல்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் புழல் சிறை அருகே அம்பத்தூர் சாலையில் பெட்ரோல் பங்கை அமைத்துள்ளது. பெண் கைதிகள் நடத்தும் இந்த பெட்ரோல் பங்கை சிறைத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி திறந்து வைத்து, கார் ஒன்றிற்கு பெட்ரோல் போட்டார். 






இந்த பெட்ரோல் பங்கில் காலை மாலை என இரண்டு ஷிப்ட் கணக்கில் 22 பெண் கைதிகள் வேலை பார்க்கின்றனர். புழல் சிறையில் 250க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் இருக்கும் நிலையில், அவர்களில் 71 பேர் மட்டுமே தண்டனை கைதிகளாக உள்ளனர். இந்த பெண்களின் வாழ்வாதாரத்திற்காகவும், அவர்களின் எதிர்கால வாழ்வுக்காகவும் பெட்ரோல் பங்க் நிறுவப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஒவ்வொரு பெண் கைதிக்கும் மாதம் ரூ,6,000 முதல் ரூ.10,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 






இதனுடன் சேர்த்து தமிழகம் முழுவதும் சிறை கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்கின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான், பெண் கைதிகளுக்கான முதல் பெட்ரோல் பங்க் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் பெண் கைதிகளுக்கான பெட்ரோல் பங்க் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.