வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே முழுவதுமாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் டுவிட்டர் பக்கத்தில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்தது. மாலை 5.15 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இரவு 7.45 மணியளவில் முழுவதுமாக கரையை கடந்தது. தாழ்வு மண்டலம் கரையை கடந்தபோது 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நாளைக்குள் முழுமையாக வலுவிழக்கும்’ என்று பதிவிடப்பட்டிருந்தது.
முன்னதாக, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்,“வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியது. கடந்த 6 மணி நேரத்தில் 16 கிலோ மீட்டரில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதே நிலையில் நகர்ந்து செல்லும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும்” என்றார்.
சென்னைக்கான ‘ரெட் அலர்ட்’ விலகியது
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும், சென்னைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்