Sankaraiah Passes Away : 102 வயதான சங்கரய்யா சென்னை அப்பலோ மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்னர் மூச்சு திணறல், சளி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார். முன்னதாக, சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை தமிழக அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 


அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பிறகு சங்கரய்யா உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு உறவினர்கள் அஞ்சலிக்காக கொண்டுசெல்லப்படுகிறது. பின்னர், தலைவர்கள் அஞ்சலிக்காக சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு எடுத்து வரப்படுகிறது


3 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர்: 



  1. 1967, 77, 80 ஆகிய ஆண்டுகளில் மதுரை மேற்கு & கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக தேர்வானார் சங்கரய்யா.

  2. 1986ம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார்.

  3. 1995-2002ம்  ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக பதவி வகித்தார் சங்கரய்யா.

  4. 1939ல் மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் சங்கரய்யா. 


சங்கரய்யா: யார் இவர்?


மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்த என்.சங்கரய்யா யார் என்பதை இங்கு பார்ப்போம்.


கடந்த 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா தன் பெயரைத்தான் வைக்கவேண்டும் என்று அடம்பிடித்து வீட்டில் உண்ணாவிரதம் இருக்க, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிரதாப சந்திரனின் பெயர் சங்கரய்யா என மாறியது. நீண்ட நெடிய போராட்ட வரலாறு கொண்ட சங்கரய்யாவின் முதல் போராட்டமே இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்ததுதான். அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ராஜாஜி. அவர் 1938-ல் உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்குப் பெரியார், சிங்காரவேலர், ஜீவா போன்ற தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையடுத்து மதுரைக்கு வந்த ராஜாஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாணவர் சங்கரய்யா பங்கேற்றார்.


மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ரகசியமாக அமைக்கப்பட்டது. சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் இதில் உறுப்பினர்களானார்கள். செயல்பாடுகள் வேகமெடுத்தன. 1941-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கைதானார்கள். இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். சங்கரய்யா தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதானார். அதோடு அவரது கல்லூரிப் படிப்புக்கும், அவரை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவுக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.“நாங்கள் வேலைக்காகப் போராடுபவர்கள் அல்ல… நாட்டு விடுதலைக்காகப் போராடுபவர்கள்” என்று மாணவர்கள் மத்தியில் ஆர்ப்பரித்தார், சங்கரய்யா.


பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வை எழுதுவதற்கு 15 நாள்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரால் கல்லூரித் தேர்வை எழுத முடியவில்லை. அப்போது, 18 மாதங்கள் சிறைக்கொடுமைகளை அனுபவித்தார். கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை 1942 ஜூலையில் நீக்கப்பட்டது. அப்போது நடந்த மாணவர் சங்க மாநாட்டில் தமிழ்நாட்டுப் பிரிவின் பொதுச் செயலாளராகச் சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்தில், "வெள்ளையனே வெளியேறு!" இயக்கத்தைத் தொடங்க காங்கிரஸ் முடிவு செய்தது. காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை விடுதலை செய்யக் கோரி, மாணவர்களைத் திரட்டி இயக்கம் நடத்தினார் சங்கரய்யா.
 
 பாளையங்கோட்டையில் நடந்த போலீஸ் தடியடியில் படுகாயம் அடைந்தார். அக்டோபர் மாதத்தில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுச் சிறையிடப்பட்டார்,1944-ல்  சங்கரய்யா விடுதலையானார். கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரை ஹார்வி மில்லின் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், கூலி உயர்வுக்கும், தொழிற்சங்க உரிமைகளுக்கும் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றி கண்ட காலகட்டமாகும். கம்யூனிஸ்டுகள் மீது காங்கிரஸ்கார்கள் கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்களை முறியடித்த காலமாகும். கலை, இலக்கியம், ஆடல், பாடல் என்பதைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களைக் கிளர்ந்தெழச் செய்த காலமாகும். இந்த இயக்கங்கள் அனைத்திலும் பெரும் பங்கேற்றார் சங்கரய்யா. அப்போதுதான் வரலாற்றுச் சிறப்புமிக்க கடற்படையினர் போராட்டமும் நடந்தது. இதை ஆதரிக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. இந்த ஆதரவுப் போராட்டத்தை மதுரையில் நடத்தினார் சங்கரய்யா. துப்பாக்கியைக் காட்டி போலீஸார் மிரட்டியபோதும் போராட்டம் நடந்தது. அதே காலத்தில்தான் மதுரைச் சதி வழக்கு போடப்பட்டு பி. ராமமூர்த்தி, சங்கரய்யா உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையிடப்பட்டார்கள். 


இந்திய சுதந்திரத்துக்கு முதல் நாள், இரவில்தான் இவர்கள் விடுதலையானார்கள். சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்குச் சுதந்திர இந்தியாவிலும் ஓய்வில்லை. முன்னைவிட அதிகப் பொறுப்புகளும் பணிகளும் காத்திருந்தன. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், 1964 முதல் மார்க்சிஸ்ட் கட்சியிலும், உயர் பொறுப்புகள் வந்துசேர்ந்தன. மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர், மத்தியக் குழு உறுப்பினர், விவசாயிகள் சங்கத்தின் தமிழக, அனைத்திந்திய நிர்வாகி, 1967, 1977, 1980 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று மொத்தம் 11 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ‘ஜனசக்தி’ பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறார். 1963-ல் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘தீக்கதிர்’ தொடங்கப்பட்டபோது, அதில் கட்டுரைகள் எழுதிவந்த அவர், 1966-ல் அது மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழாக அறிவிக்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார்.