விழுப்புரம், : இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் அஞ்சலகங்களில் புதிய விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


புதுச்சேரி அஞ்சல் துறை வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...


விபத்து காப்பீட்டு திட்டம்


தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி பொது காப்பீட்டு நிறுவனங்களோடு இணைந்து ஆண்டிற்கு 520, 555, 755 ரூபாய் பிரீமியத்தில் 10, 15 லட்சம் ரூபாய்க்கான மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. சாதாரண மக்களுக்கும், விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள தபால் நிலையங்கள் (தபால்காரர், கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம் மிக, மிக குறைந்த பிரீமியம் தொகையோடு கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்த உள்ளனர்.


இந்த திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளோர் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள முகவரி சான்றின் நகல்களை எவ்விதமான காகித பயன்பாடின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி, 5 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10, 15 லட்சம் ரூபாய் (விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம்) ஆகியோருக்கு சலுகை வழங்கப்படுகிறது.


திருமண செலவிற்கு 1 லட்சம் ரூபாய்


ஆண்டிற்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்யும் வசதியும் உள்ளது. தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனையும் பெறலாம். விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை) வழங்கப்படுகிறது. விபத்தால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டோரின் குழந்தைகளன் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரையும், திருமண செலவிற்கு 1 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.


விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1000 வீதம் 15 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. விபத்தால் இறக்க நேரிட்டால், ஈம சடங்கு  காரியங்கள் செய்ய 5,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் அருகே உள்ள தபால் நிலையம், தபால் காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் உடனே இணைந்து பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.