தமிழ்நாட்டில் மே 18, 19, 20 தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடரும் கனமழை:
மேலும், தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், அடுத்த 3 மணிநேரத்தில் திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை:
நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருமருகல், பரவை, சிக்கல், கீழ்வேளூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அதேபோல், சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார், கரிக்குளம், அம்மா சத்திரம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சேலம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சுற்றியுள்ள பிரம்மதேசம் முருக்கேரி, ஆலத்தூர் நடுக்குப்பம், கூனிமேடு, அனுமந்தை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அதிகாலை முதலில் லேசான மழை பெய்து வருகிறது இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்:
கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு அறிவுறுத்தியுள்ளது.
கனமழையால் சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர் உட்பட 20 ஆட்சியர்களுக்கு வருவாய், பேரிடர் மேலாண்மை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
இதில், கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும். கனமழையின்போது எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் ஆட்சியர்கள் உடனே பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தர வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க தடை:
கனமழை மற்றும் சூறாவளி எதிரொலியாக, ராமேஸ்வரம் பகுதி நாட்டுபடகு மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க மீன்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இன்று முதல் மே 19 வரை வங்க கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வரை சூறாவளி வீசி, கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால், கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதில் சிரமம் ஏற்படும்.
இதை தவிர்க்க ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் இன்று முதல் மே 19 வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம். விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க, ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயினுலாபுதீன் தெரிவித்துள்ளார்.