அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிக மழை கொடுப்பது வடகிழக்கு பருவமழைதான். இருப்பினும் தென்மேற்கு பருவ மழை நன்றாக பெய்தால் மட்டுமே பெரும்பாலான அணைகளில் நீர்வரத்து அதிகரிக்கும். இந்த தென்மேற்கு பருவ மழை பொதுவாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழை கொடுப்பது தென்மேற்கு பருவ மழைதான்.
தென்மேற்கு பருவ மழை கடந்த ஆண்டு சராசரி அளவு பெய்த்து. இந்த ஆண்டு புவி வெப்பமயமாதல் காரணமாக எல் நினோ நிகழ்வு இருக்கும் என்பதால் மழையின் அளவு சராசரி அளவை விட குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் ஜூன் 4 ஆம் தேதி தென் மேற்கு பருவ மழை கேரளா மாநிலத்தில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான அதிதீவிர புயலின் காரணமாக தென் மேற்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவ மழை, இந்த ஆண்டு தாமதமாகி உள்ளது. இந்த பருவமழை தொடங்கும் நிலையில் இரண்டு புயல்கள் உருவாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலை, அரபிக் கடலில் பிபர்ஜாய் என்ற அதிதீவிர புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் பாகிஸ்தான் நாட்டில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மற்றொன்று வங்கக் கடலில் உருவாகி, மேற்கு வங்கத்தை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
08.06.2023 மற்றும் 09.06.2023:: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.06.2023 மற்றும் 11.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.