சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உலக தலைவர்கள் கலந்து கொண்டு ஜி 20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விளக்க கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இரா.ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "உலகில் போரை விட ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வறுமை காரணமாக ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. கொரோனா காலத்தில் இந்தியாவில் 80 மில்லியன் மக்கள் உயிரிழப்பார்கள் என உலக நாடுகள் கணித்தன. ஆனால் அனைத்து கணிப்புகளையும் முறியடித்து கொரோனாவில் இருந்து விரைவாக மீண்ட நாடாக இந்தியா உருவெடுத்தது. உலகின் பல கோடி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழலில் கூட அவர்களுக்கு உணவு கிடைப்பதையும் சிறந்த சுகாதார வசதி கிடைப்பதையும் இந்தியா உறுதி செய்ததால் அதிகளவு மரணங்கள் தடுக்கப்பட்டன. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்ததுடன் 100 கோடி பேருக்கு விரைவாக செலுத்திய பெருமை இந்தியாவிற்கு மட்டுமே உள்ளது” என்று கூறினார்.


 


”இதேபோல், காலநிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் உலகின் மிக முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் இதற்கான தீர்வு காணும் வகையில் வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 50 சதவீத மின்னாற்றலை பசுமையாக்க முடிவெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2070 ஆம் ஆண்டிற்கு கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக்கவும் இந்தியா திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. உலகின் 17 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா 5 சதவீதத்திற்கும் குறைவான கார்பன் உமிழ்வை கொண்டுள்ளது” என்றார். 


இந்தியாவின் இளைஞர் வளத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் முத்ரா திட்டம் தொடங்கப்பட்ட 40 கோடி பேருக்கு ரூ. 23 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2016 இல் 60 சதவீதம் பேர் திறந்தவெளியில் மல ஜலம் கழித்த நிலையில் அந்த நிலை 10 ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளது. 10 கோடி மகளிருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் மகளிருக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வீடற்ற 13 மில்லியன் மக்களுக்கு பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தரப்பட்டுள்ளது.


 


மகளிர் இட ஒதுக்கீட்டுக்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களுக்கான சட்டத்தை மகளிரே உருவாக்க முடியும். ராணுவத்தில் மருத்துவப் பணியில் மட்டுமே மகளிர் இருந்த நிலை மாறி தற்போது போர் விமானம் ஓட்டும் அளவிற்கு மகளிருக்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. முழுமையாக வளர்ந்த நாடாக, சுய ஆற்றல் மிக்க நாடாக, உலகின் நண்பனாக, வழிகாட்ட உதவும் நாடாக மாற இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.


இந்த நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் தங்கவேல், ஜி 20 கண்காணிப்பு அலுவலர் ஜெயராமன், உள் தர மதிப்பீட்டு மைய இயக்குநர் யோகானந்தன், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.