இந்தியாவில் எதிரொலித்த போர்:


இந்தியாவில் வணிகம் செய்வதற்காக வந்த பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும், இந்திய மண்ணில் அவர்களுக்கிடையேயான வணிக போட்டி காரணமாக, அவ்வப்போது சண்டை போட ஆரம்பித்தனர். 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில், ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும் போரில் ஈடுபட்டனர். அங்கு நடைபெற்ற போரானது, இந்தியாவிலும் எதிரொலித்தது.


கர்நாடக போர்: பிரெஞ்சு ஆதிக்கம் ஒடுக்கம்:


இந்தியாவில் ஔரங்கசீப் இறப்பிற்கு பிறகு, முகலாயர்களின் வலிமையும் சற்று குறைந்து கொண்டே வந்தது. இதையடுத்து, கர்நாடகத்தில் வெற்றிடம் உருவானது. அப்பகுதியை கைப்பற்ற வேண்டுமென சந்தா சாகிப்பும், ஆர்காடு நவாப் அன்வருதீனும் மோதி கொண்டனர். இந்திய மன்னர்களுக்கிடையேயான சண்டையில்,  ஐரோப்பியர்கள் மூக்கை நுழைக்க ஆரம்பித்து, அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர்.


சந்தா சாகிப்பிற்கு ஆதரவாக பிரெஞ்சு களமிறங்கியது. ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக ஆங்கிலேயர் களமிறங்கினர்.




இவ்வாறாக இவர்களுக்கிடையில் நடைபெற்ற கர்நாடக போர்களில் இறுதியாக ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். அப்போது பிரெஞ்சுக்காரர்களிடம், ஆங்கிலேயர்கள் ஒப்பந்தம் (பாரீஸ் ஒப்பந்தம்) செய்து கொண்டனர்.


ஒப்பந்தத்தின்படி  ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பாண்டிச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கே திருப்பி கொடுத்துவிட்டனர். மேலும் பாண்டிச்சேரி , காரைக்கால் மாகே, யானம் ஆகிய பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பிரெஞ்சு தலையீடு இருக்கக் கூடாது எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது. இத்துடன் பிரெஞ்சுக்காரர்கள், தங்கள் ஆதிக்கத்தை விரிவுப்படுத்துவதை நிறுத்தி கொண்டனர்.


பிளாசி போர்:


இந்திய மண்ணில், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் மோதிக் கொள்வதை பார்த்த வங்காள பகுதியை ஆட்சியை செய்த சிராஜ் உத் தௌலா, அந்நியர்கள் மீது கடும் கோபம் கொண்டார். மேலும் வரி விலக்கு பெற்ற ஆங்கிலேயர்களை, வரி செலுத்த வேண்டும் எனவும் உத்திரவிட்டார். ஆனால் ஆங்கிலேயர்கள் மறுத்து விட்டனர்.




இதனால் இருவர்களுக்கிடையே போர் மூண்டது. சிராஜ் உத் தௌலாவின் வலிமையை கண்டு அஞ்சிய ஆங்கிலேயர்கள்,  சிராஜின் படைத்தளபதி மீர் ஜாபரை வைத்து சதி திட்டம்  தீட்டினர். இந்நிலையில் போர் தொடங்கியவுடன், பெரும்பாலான படைகள் படை தளபதி உத்தரவுப்படி விலகிக் கொண்டன. இதனால் போர் தொடங்கிய 2 மணி நேரத்துக்குள் முடிந்தது. போரின் முடிவில் சிராஜ் கொல்லப்பட்டார்.


அதையடுத்து மீர் ஜாபர் நாட்டை ஆள, ஆங்கிலேயர்கள் வரி செலுத்தாமல் வர்த்தகம் செய்து வந்தனர். இதனால் வங்காளத்தில் பண பற்றாக்குறை ஏற்பட ஆரம்பித்தது. இதையடுத்து  மீர்  ஜாபரும் ஆங்கிலேயரை வரி செலுத்த கட்டாயப்படுத்தியதால், அவரை அகற்றிவிட்டு, மிர் காசிம் என்பவரை ஆட்சியில் அமர வைக்கின்றனர்.


ஆனால் சில காலங்களில் வரி செலுத்த வேண்டும் என மிர் காசிமும் உத்தரவிடுகிறார். இதனால் அவர்களுக்கு போர் ஏற்படுகிறது. முகலாயர்கள் மற்றும் மீர்காசிம் உள்ளிட்ட படைகள் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தன. பக்சா என்ற இடத்தில் நடைபெற்ற இப்போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஆங்கிலேயர்கள் வங்காள பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பெரும்பாலான இந்திய பகுதிகளையும் , 1799ல் தஞ்சை, கொங்கு நாடு உள்ளிட்ட பகுதிகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். கைப்பற்றிய பகுதிகளில் வரிகளை செலுத்துமாறு கட்டாயப்படுத்தினர்.