சாத்தான்குளம் பென்னிக்ஸ்-ஜெயராஜ் கொலை சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியடைய செய்த ஒன்றாகும். விசாரணை என்று சொல்லி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் இருவரும், பின்னர் வீடு திரும்பவே இல்லை. காவல் துறையினரின் அராஜகத்திற்கு பலியாகிய சோகம் எல்லாரையும் உலுக்கியது. போலவே, தமிழ்நாட்டில் விசாரணைக் கைதிகள் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதிற்கு கடந்த சில மாதங்களில் நடந்த ‘Custodial Death’, அதாவது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்பது சாட்சியாக இருக்கிறது. இதை அதிகார துஷ்பிரயோகம் என்பதா? எப்போது இதுபோன்ற விதிமீறல்கள், மனிதாபிமான இல்லாத நடந்தேறும் அநீதிகள் முடிவுக்கு வரும்? பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டியிவர்களே, தங்களின் கடமையை மீறுவது சரியா? அல்லது இவை சாதாரண மரணங்களா? உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கினால் போதுமா? விசாரணைக் கைதிகள் மரணங்களுக்கு இதுவரை காவல்துறை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இப்படி பல கேள்விகள் பொதுமக்களால் வைக்கப்படுகின்றன.. அப்படியிருக்கையில், கடந்த சில மாதங்களாக நடந்த விசாரணைக் கைதிகளின் மரணம் குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தும் இக்கட்டுரையில் காணலாம்.
சம்பவம் -1 சென்னை
சென்னை அருகே கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல்படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் 18.4.2022-ம் தேதி இரவு 11.30 மணியளவில் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து, அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி, ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இருவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 19.4.2022-ம் தேதி காலையில் இருவருக்கும் போலீஸார் சிற்றுண்டி வழங்கினர். சிறிது நேரத்தில் விக்னேஷுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. சிகிக்கைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், இறுதியில் அவர் இறந்தேபோனார். இதற்கு பலரிடமிருந்து எதிர்ப்பு குரல் ஒலிக்கத் தொடங்கியது.
மேலும், விக்னேஷ் – போலீசார் இருவருக்கும் இடையே எற்பட்ட தகராறில், விக்னேஷை போலீசார் அடித்தே கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை, துறை விசாரணை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்காவல் படை தீபக் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சிபிசிஐடி போலீஸார் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை கைதி விக்னேஷ் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலில் ஒரு லட்சம் ரூபாய் நிவாணரம் அறிவித்தார். மேலும், விக்னேஷ் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகவும் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், விக்னேஷ் மரணத்தில் ரூ. 10 லட்சம் நிவாரணத்தை திருப்பி அளிக்க குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
சம்பவம் -2- திருவண்ணாமலை
சாராயம் காய்ச்சியதாக கூறப்பட்டு கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட தங்கமணி காவல் நிலையத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். திருவண்னாமலை தண்டராம்பட்டு கிராமத்தில் தங்கமணி என்பவரை சாராயம் காய்ச்சியதாக கூறி மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் இம்மாதம் 26-ம் தேதி கைது செய்தனர். பின்னர், தங்கமணி திருவண்ணா மலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை 27-ம் தேதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையெடுத்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர், போலீசார் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாடினர். மேலும், தனது கணவரை விடுவிக்க ரூ.2 லட்சம் தொகை கேட்டதாகவும் அவர்கள் குற்றம்சாடியுள்ளனர். மேலும், போலீசாரால் காரணமின்றி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர், பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, சட்டமன்றத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சம்பவம் 3- நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் சந்தேகத்தின் பேரில் காவல் துறையினரால் அழைத்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளியான பிரபாகரனின் மரணம். சேந்தமங்கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 16ஆம் தேதி 20 பவுன் நகை காணாமல் போனது. இந்த வழக்கில் தர்மபுரியைச் சேர்ந்த குமார் என்பவரைக் கைது செய்தனர். மேலும், சேலம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன் என்பவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அவரது மனைவி ஹம்சாலாவையும் அழைத்துச் சென்றனர்.அன்று இரவே பிரபாகரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மர்மான முறையில் இறந்த பிரபாகரனின் மரணம் குறித்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரபாகரன் திடீர் மரணம் தொடர்பாகச் சட்டப் பிரிவு 176 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்பு உள்ள சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சந்திரன், பூங்கொடி ஏட்டு குழந்தைவேலு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
’தனது கணவன் மீது செய்யாத குற்றத்திற்காக பழி சுமத்தப்பட்டது. எங்களை போலீசார் கடுமையான முறையில் நடத்தினார்கள். நாங்கள் போலீசாரால் தாக்கப்பட்டதுதான் உண்மை.’ என்று பிரபாகரனி மனைவி தன்பக்க நியாயத்தை கூறியுள்ளார்.
இந்நிலையில், பிரபாகரனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சம்பவம் – 4 சேலம்
போலீசாரின் கடுமையான தாக்குதலுக்கு பலியான முருகேசனின் மரணம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா கால ஊரடங்கு விதிமுறைகள் அமலில் இருந்த காலம். அப்போது, திருவண்ணாமலையில் உள்ள சோதனைச் சாவடியில் காவல் துறையினர் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்ததாகவும், மதுபாட்டில்களை வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது. அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் மீது காவல் துறையினர் லத்தியால் தாக்கியுள்ளனர். அப்போது இடையப்பட்டியை சேர்ந்த முருகேசன் (45) என்ற விவசாயக் கூலியை காவல் துறையினர் தள்ளிவிட்டனர். அவரை கடுமையாக தாக்கியதால், சம்பவ இடத்திலேயே, பின் மண்டையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் காவல் துறை சிறப்பு ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், உயிரிழந்த முருகேசன் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி உத்திரவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதுபோன்ற விசாரணை கைதிகளின் மரணங்கள் குறித்த விஷயம் வருத்தம் அளிப்பதாகவும், இனி இதில் சரியான முறைகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இனி நடவடிக்கைகள் என்ன என பொறுத்திருந்து பார்க்கவேண்டும்