சேலம் மாவட்டம், வாழப்பாடியில் காணாமல்போன தனது கணவரை கண்டுபிடிக்க ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து பிரச்சாரம் செய்தும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் அவரது மனைவி ஊர் ஊராக சென்று தேடுகிறார். வாழப்பாடியை அடுத்துள்ள முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவராமன் இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். குறைந்த அளவே வருமானம் கிடைத்தாலும் மனைவி மற்றும் குடும்பத்தாருடன் பாசமாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி காலை தனது வீட்டில் இருந்து வாழப்பாடி சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தனது கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பழனியம்மாள் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார் ஆனால் அவர் கிடைக்கவில்லை.



பல இடங்களில் தேடி ஓய்ந்து போன பழனியம்மாள் தன் கணவனை கண்டுபிடித்து தரும்படி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வாழப்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனாலும் சிவராமன் குறித்து எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை பொறுத்து பொறுத்து பார்த்த பழனியம்மாள் ஒரு கட்டத்தில் தானே களமிறங்கி காணாமல் போன தனது கணவரை கண்டு பிடிப்பதற்காக ஆட்டோ ஒன்றை வாடகைக்கு வைத்து அதில் ஒலிபெருக்கி மூலம் தன்னுடைய கணவர் பற்றிய தகவல்களை பதிவு செய்து ஒளிபரப்பிக் கொண்டே ஊர் ஊராக சென்று தன் கணவனை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் அங்குள்ள மக்களிடம் தன் கணவரை பற்றிய தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி தேடி அலைந்து வருகிறார். எப்படியும் காணாமல் போன தனது கணவனை கண்டுபிடித்து விடுவேன் என்று நம்பிக்கையோடு கடந்த 22 நாட்களாக கண்ணீரோடு ஊர் ஊராக தன் கணவனை தேடி வருகிறார். 



இதுகுறித்து சிவராமனின் மனைவி பழனியம்மாளிடம் தொடர்பு கொண்டபோது, 2013 ஆம் ஆண்டு தனது கணவருக்கு முதன்முறையாக வலிப்பு ஏற்பட்டது. அதன்பின் அவ்வப்போது வலிப்பு ஏற்படும் என்பதால் அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திடீரென ஒருநாள் அவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டு சாலையில் அமர்ந்து வாகன ஓட்டிகள் மீது மண்ணை வாரி இறைத்துக் கொண்டிருந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றேன். அதன்பின் அவருக்கு ஞாபக மறதி அதிகரித்தது. இதனால் அவரை வேலைக்கு அனுப்பாமல் தான் வேலைக்கு சென்றதாக கூறினார். இப்படியெல்லாம் குழந்தை போன்று பார்த்து வந்த நிலையில் 7 ஆம் தேதி காலை சமையல் அறையில் இருந்த போது கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். சிறிது நேரமாகியும் வெளியே வராததால் பயத்தில் சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லை என தெரியவந்தது. பின்னர், அருகிலிருந்த கிராம மக்களிடம் விசாரித்த போது அவர் முத்தம்பட்டிக்கு வழிதெரியாமல் பக்கத்து கிராமத்தில் வழி கேட்டு அலைவது தெரியவந்தது. அவரைப்பற்றி தெரிந்தவர்கள் பலர் இருந்தும் யாரும் அவரை வீட்டிற்கு அலைந்து வரவில்லை என்று கண்ணீருடன் வேதனை தெரிவித்தார்.