பண்டிகைக்காலங்களில் சென்னையின் போக்குவரத்துப் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்காது. தீபாவளி, பொங்கல் என விடுமுறை ஒருநாள் தான் என்றாலும் சென்னையிலிருந்து வெளியூர் பயணிப்பவர்கள் அதற்கான திட்டமிடலை மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும். தீபாவளிக்கான மூன்று சிறப்பு ரயில்கள், தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம் உட்பட்ட சென்னையின் ஐந்து பகுதிகளில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் என மக்கள் போக்குவரத்தை எளிதாக்க அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டாலும் கிடைக்கும் ஒரு நாள் பண்டிகை விடுமுறையில் கோயம்பேட்டிலிருந்து கடைசி நிமிடத்தில் கிடைக்கும் பேருந்தில் ஏறிச் செல்பவர்கள்தான் அதிகம். 


இப்படி எப்படியேனும் ஊருக்குச் சென்றுவிடவேண்டும் எனத் தத்தளிப்பவர்களின் அவசரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பேருந்துகள் இந்தமுறை டிக்கேட் கட்டணத்தைக் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளன. 


சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் தனியார் பேருந்துகளில் ஏசி அல்லாத ஸ்லீப்பர்  பேருந்தில் அதிகபட்சக் கட்டணம் ரூ.3000. முரணாக சென்னை டு மதுரை விமானத்தில் சென்றாலும் டிக்கேட் அதே விலைதான். இத்தனைக்கும் பயண நேரம் கூட ஒரு மணிநேரம்தான். இதுவே சீட்டர் பேருந்துக்கான டிக்கெட் விலை ரூ.665. 


அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வரை சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் தனியார் பேருந்துக் கட்டணக் கொள்ளை என்னும் நாட்பட்ட துருவை நீக்க எந்தவித முயற்சியும் பலன் அளிப்பதில்லை.


அன்பழகன்


தனியார் பேருந்துகளுக்கென்று கட்டண விதிகள் எதுவும் கிடையாதா? இருந்தும் முறைமையாகப் பின்பற்றப்படாதது ஏன்? ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகனிடம் பேசினோம். அவர் கூறுகையில், ‘ஒரு ஆம்னி பேருந்து 500 கிலோ மீட்டருக்கு இயக்க குறைந்த பட்ச செலவு ரூபாய் 26,350.00 இது இன்றைய டீசல் விலையில் ஏற்படுகிறது. மேலும் டீசல் விலை மாறிக்கொண்டே உள்ளது. இவை அத்தனையும் கடந்து டிக்கெட் விலையைக் குறைத்தால் அரசுப் பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும், அதே சமயம் விலையைக் கூடுதலாகவும் மாற்றுவதில்லை. இந்த விதிகளை அடிப்படையாக வைத்து பேருந்துகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கிறோம்.அதனைக் கடந்து யாரும் டிக்கெட் விலையை உயர்த்த மாட்டார்கள். ஒன்றிரண்டு ஆம்னி பேருந்துகள் இதுபோன்று டிக்கெட் விலை எக்கச்சக்கமாக உயர்த்துவதால் மொத்த தனியார் பேருந்து நிர்வாகத்தினருக்கும் அவப்பெயராகிறது.இது போன்று அதிகமான விலை குறித்து யாரேனும் புகார் அளித்தால் நேரடியாக அதைக் கவனித்து தொடர்புடைய பேருந்து நிறுவனத்தில் அதுபற்றிப் பேசி விலையை நிர்ணயித்த அளவுக்கே மாற்றுகிறோம்’ என்கிறார்.


தனியார் பேருந்துகளுக்கான அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளதுபடி சென்னையில் இருந்து மதுரை செல்லும் தனியார் பேருந்தில் அதிகபட்சமாக ஏசி அல்லாத ஸ்லீப்பர்களுக்கு ரூ.1580 மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
விழாக்காலத்தில் மக்களின் அவசரத்தைத் தனக்குச் சாதகமாக்கி விலை உயர்த்தும் தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


நீங்கள் சென்னையிலிருந்து வெளியூருக்குப் பயணிப்பவரா? நீங்கள் செல்லும் தனியார் பேருந்து அதிகபட்சமாக டிக்கெட் கட்டணம் எவ்வளவு வசூலிக்கலாம் என்பதை http://aoboa.co.in/BusFare/index என்கிற இணைப்பில் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்