தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகிரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்போது கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கோவிட் - 19 சிகிச்சைக்கு பயனளிக்கும் என்ற நம்பிக்கையில் ரெம்டெசிவிர் மருந்தை பலரும் பயன்படுத்த துவங்கியதால் , அந்த மருந்திற்கான தட்டுப்பாடு ஏற்படும் சூழல் தமிழகத்தில் நிலவு வருகிறது.
கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி, ரெம்டெசிவிர் மருந்தை அவசரக்காலப் பயன்பாடாக மிதமான கொரோனா நோய் அறிகுறி உள்ள நோயாளிகளிடம் (ஆக்சிஜன் செலுத்தப்படுபவர்கள்) பயன்படுத்தலாம். அதேசமயம் இந்த மருந்தை வேறு மருந்தோடு இணைத்துப் பயன்படுத்துவதால் தீங்கு ஏற்படாது என்ற சூழலில் பயன்படுத்தப்படலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இந்த மருந்தை இதுவரை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதிக்கவில்லை (சந்தை விற்பனைக்கான அனுமதி). ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இது தொடர்ந்து அவசரக்கால பயன்பாட்டுக்கான அனுமதியின் பேரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், அதிக விலையில் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் விற்பனை மையத்தை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் திறந்தது.
வெளிச்சந்தையில் கள்ளத்தனமாக 20,000 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்பட்டு வந்த ரெம்டெசிவிர் மருந்து, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு குப்பி மருந்து 1,560 ரூபாய்க்கு தரப்படுகிறது.
இந்த விற்பனை மையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் ஆதார் எண், சிடி ஸ்கேன் விவரம், மருத்துவர் சான்றிதழ் மற்றும் மருந்து வாங்க வந்திருப்பவரின் ஆதார் எண் ஆகியவற்றை வழங்குவோருக்கு ரெம்டெசிவிர் விற்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் போதிய மருந்து கையிருப்பு இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் கடந்த இரண்டு நாட்களாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
மூன்றாவது நாளான இன்று, காலை 10 மணிக்கு தொடங்கி 5 மணி வரை மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும், மாலை 5 மணிக்கு மேல் காத்திருப்பவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு நாளை மருந்துகள் வழங்கப்படும் என்று கீழ்ப்பக்கம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ரெம்டெசிவிர் கையிருப்பு:
முன்னதாக, கோவிட் - 19 சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அதிகரித்தது. இம்மாதம் முப்பதாம் தேதிவரை மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு 4 லட்சத்து 35 ஆயிரம் டோஸ்களும், குஜராத்திற்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் டோஸ்களும், உத்தரபிரதேசத்திற்கு ஒரு லட்சத்து 61 ஆயிரம் டோஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு ஒரு 58,900 டோஸ்கள் ஒதுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தகாது
தற்போதுள்ள 7 ரெம்டெசிவிர் தயாரிப்பு நிறுவனங்களின் ஒரு மாத உற்பத்தி திறன் 38.80 லட்சம் குப்பிகளாக உள்ளன. கூடுதலாக 7 இடங்களில் மாதத்துக்கு 10 லட்சம் குப்பிகளை உற்பத்தி செய்ய 6 நிறுவனங்களுக்கு விரைவு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதத்துக்கு 30 லட்சம் குப்பிகள் தயாரிக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரெம்டெசிவிர் தயாரிப்பு திறனை மாதத்துக்கு 78 லட்சம் குப்பிகளாக அதிகரிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது .
ரெம்டெசிவிர் தட்டுப்பாடு:
ரெம்டெசிவிர் மருந்து உயிர்காக்கும் மருந்தில்லை என்பதை மத்திய அரசு பல முறை தெரிவித்திருக்கிறது. Remdesivir no ‘Ram-ban’ to cure COVID என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) தலைவர் ரந்தீப் குலேரியா குறிப்பிட்டிருந்தார்.
வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ளும் பெரும்பாலான நபர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் தாமாகவே ரெம்டெசிவிர் மாத்திரையை உட்கொண்டு வருகிறார்கள். சிலர், மருத்துவர்களின் தொடர்பை பயன்படுத்தி போலி கடிதங்கள் மூலம் ரெம்டெசிவிர் மாத்திரையை தற்காப்பு காரணங்களுக்காக வீட்டில் பதுக்கி வைக்கத் தொடங்கியுள்ளனர்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் அர்விந்தர் கூறுகையில், “ரெம்டெசிவிர் மருந்துகள் வாங்கித் தேக்கிவைப்பதை மக்கள் நிறுத்தவேண்டும். ரெம்டெசிவிர் கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்தில்லை. குறைந்தபட்சமாக நோயாளி மருத்துவமனையில் தங்கும் காலக்கட்டத்தை அது குறைக்கலாம். ஆனால் அப்படி எடுத்துக்கொண்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டால் மருத்துவமனையில் மருத்துவர்கள் அருகில் இருக்கும் சமயத்தில் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட புதிய கொரோனா மேலாண்மை நெறிமுறைகளில், " தேவைப்படும் சூழலில் மருத்துவமனையில் மட்டும் அவசரகாலச் சூழலிலோ அல்லது பரிந்துரைக்கப்படாமலோ (Emergency/Off the table) ப்ளாஸ்மா, டொஸ்சிலிஸுமாப் (Tocilizumab) மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளது.