சென்னையைச் சேர்ந்த இரண்டு தனியார் நிதி நிறுவனங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. ஒரே நேரத்தில் 35 இடங்களில் கடந்த 23 ஆம் தேதியன்று ரெய்டு நடைபெற்றது. இந்த இரண்டு நிறுவனங்களும் தமிழகத்தின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் கடன் வழங்கியுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த இரண்டு தனியார் நிதி நிறுவனங்களும் அங்கீகரிக்கப்பட்ட வட்டி விகிதங்களையும் தாண்டி அநியாய வட்டி பெற்றதும் தெரியவந்துள்ளது. மேலும், வட்டிப் பணத்தை போலி வங்கிக் கணக்குகள் தொடங்கி அதில் வரவு வைத்துக் கொணடதும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த இரு நிறுவனங்களுக்கும் கணக்கில் காட்டப்படாத சொத்துகள் ஏராளம் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் வருமானத்தை மறைத்ததும் தெரியவந்துள்ளது.
ரூ.300 கோடி கணக்கில் காட்டப்படாத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரொக்கப் பணமாக ரூ.9 கோடி மீட்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை நகரும் வட்டித் தொழிலும்:
சென்னை நகரத்தில் சிறிய தொழில் தொடங்கி மிகப் பெரிய கார்ப்பரேட் நிதி நிறுவனங்கள் வரை தனியார் முதலீட்டை நம்பியிருக்கின்றன. ஆனால் வட்டி நிறுவனங்களோ வாடிக்கையாளர்களின் நெருக்கடியையும் தேவையையும் பயன்படுத்திக் கொள்கின்றன. விளைவு கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டி என்ற பெயர்களில் பலவகையான வட்டி வசூலிக்கப்படுகின்றன. மாத சம்பளக்காரர்கள் என்றால் டெபிட் கார்டை அடகு வைத்துக் கொண்டு கூட வட்டிக்கு பணம் கொடுக்கிறார்கள். இப்படி அதிக வட்டி மூலம் கோடிகளில் புரளும் தனி நபர்கள் பல கோடி வரி ஏய்ப்பும் செய்கின்றனர்.
இப்படியாக நாடு முழுதும், வரி ஏய்ப்பு, ஹவாலா பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் அண்மையில் டெல்லி, ஹரியானா மாநிலங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். தமிழகத்தின் தலைநகரான சென்னையிலும், சிறிய அளவிலான நிதி நிறுவனங்கள், வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்வோர் வாயிலாக, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக, வரித்துறைக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள வட்டிக்கடைக்காரர்கள், சிறியளவில் நிதி நிறுவனம் நடத்துவோர் சம்பந்தப்பட்ட இடங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, புரசைவாக்கம், தாசபிரகாஷ், எழும்பூர், சவுகார்பேட்டை, பாரிமுனை, தியாகராய நகர் உட்பட 32 இடங்களில், 150க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.