இன்று காலை முதல் தமிழ்நாடு அமைச்சர் எ.வ வேலு வீட்டில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலையில் இருக்கும் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காலை முதல் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான வீடு கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினை அதிரடியாக சோதனையிட்டு வருகின்றனர். 


சோதனை நடைபெறும் இடங்கள்:



  • சென்னை அண்ணா நகர் (மேற்கு) பகுதியில் உள்ள சிண்டிகேட் பேங்க் காலனி 10-வது தெருவில் உள்ள கட்டுமான தொழிலதிபர் கமலாக்கர் ரெட்டி என்பவர் வீட்டில் வருமானவரி துறை சோதனை.

  • சென்னை புரசைவாக்கம் பிரக்லின் ரோட்டில் உள்ள டிவிஎச் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமித் என்பவரது வீட்டில் சோதனை. இதில் நான்காவது பிளாக்கில் எண் 4152 எண் கொண்ட அமீத் வீட்டில் வருமானவரித்துறை  அதிகாரிகள் சோதனை. அமீத் அரசு புதிதாக கட்டி வரும் கட்டிட வேலைகளுக்கு மின்சாரம் சம்பந்தப்பட்ட பொருட்களை விநோயகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • சென்னை அமைந்தகரை செனாய் நகர் பகுதியில் ஈஸ்ட் பார்க் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் வருமானவரித்துறை சோதனை.

  • சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலக அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பைனான்சியர் ஒருவரின் வீட்டில் சோதனை.

  • கரூர் காந்திபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் நடத்தி வரும் சுரேஷ் என்பவரது வீடு அலுவலகத்தில் சோதனை. 

  • மேலும் கரூரில் திமுக முன்னாள் சேர்மன் சக்திவேல் என்பவரது வீட்டிலும் சோதனை.

  • கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பார்சன் சேஷ் நெஸ்ல்  குடியிருப்பில் வசித்து வரும் திமுக  நிர்வாகி மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை. எ.வ.வேலு உறவினரான மீனா ஜெயக்குமார் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவில் மாநில துணைச் செயலாளராக உள்ளார்.

  • திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

  • சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ரெசிடென்சி நட்சத்திர விடுதியில்  வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்பாசாமி ரியல்எஸ்டேட் உரிமையாளரின் மகன் ரவி தான் ரெசிடென்சி விடுதியின் உரிமையாளர். சென்னை கோட்டூர் கார்டன் பகுதியில் தொழில்அதிபர் அஜீத் குமார் என்பவரது வீட்டில் சோதனை.

  • சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வரும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிருஷ்ணன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை.

  • சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வரும் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் HR தினகர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை.


எ.வ.வேலுவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாது அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் போன்ற பிரிவுகளையும் அமைச்சர் எ.வ.வேலு கவனித்து வருகிறார். அதனால் அது சார்ந்த ஒப்பந்ததாரர்கள் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா என்ற அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல். இதற்கு முன்னதாக 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாகவும் வருமான வரி சோதனை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.


கடந்த மாதம் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டது வருமான வரித் துறை. இதில் ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.


அதே போல கடந்த ஜூலை மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. அதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் தற்போது சிறையில் உள்ளார். இப்படியாக வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறை சார்பில் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் சோதனை அவ்வப்போது மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.