பிபிசி செய்தி நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். குஜராத் கலவரம் குறித்தான ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டத்தை தொடர்ந்து, இந்த சோதனை நடைபெறுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்


முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:


இந்நிலையில், பிபிசி செய்தி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவர் தெரிவித்துள்ளதாவது, எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்திற்கும் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக செயல்படும் நிறுவனங்கள் இன்றியமையாதவை. ஆனால், தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் கீழ், இந்த நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்கள்  முற்றிலும் சுதந்திரத்தை இழந்துவிட்டன. 


அமலாக்கத் துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை போன்ற அரசு முகமைகள், அரசியல் எதிரிகளைக் குறிவைக்க பயன்படுத்தப்படுகின்றன.






பாடம் புகட்டுவார்கள்:


இது போன்ற அரசு முகமைகளை தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் அழிப்பதற்குக் காரணமான உங்களை, இந்த நாட்டு மக்கள் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து, வரவிருக்கும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில், குஜராத் கலவரம் குறித்து, பிபிசி 2 ஆவணப்படங்களை வெளியிட்டிருந்தது. அதில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்தும், தற்போதைய சிறுபான்மையினரின் நிலைமை குறித்தும் ஆவணப்படுத்தப்பட்டது. இதையடுத்து, பிபிசி-க்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாக எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. 


மக்களாட்சிக்கு எதிரான போக்கு:


இதற்கு முன்பு நியூஸ்கிளிக் மற்றும் நியூஸ்லாண்டரி செய்தி நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். எப்பொழுது எல்லாம் அரசாங்கத்துக்கு எதிராக கடுமையாக விமர்சனம் வைக்கப்படுகிறதோ, அப்பொழுது எல்லா அரசாங்கத்தின் முகமைகள் செய்தி நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன என இஜிஐ தெரிவித்துள்ளது. 


இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் செயல் . இது மக்களாட்சிக்கு எதிரான போக்கு.சோதனைகளானது வரையறுக்கப்பட்ட விதிகளுக்குள் இருக்க வேண்டும். மேலும் ஊடகங்களின் சுதந்தரத்தை பாதிக்காத வகையில் அரசாங்கம் இருக்க வேண்டும் எனவும் எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.