CM MK Stalin: தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்கள சென்றடைவதை உறுதி செய்ய,  நீங்கள் நலமா திட்டம் தொடங்கப்படுகிறது.


”நீங்கள் நலமா” திட்டம்:


அண்மையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசுகையில், “அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டம் மார்ச் 6ம் தேதி தொடங்கப்படும்” என அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம், முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் போன்ற அனைத்து அரசு அதிகாரிகளும் தமிழ்நாடு மக்களை செல்போனில் தொடர்பு கொண்டு மக்களின் குறைகள் குறித்து கேட்டறியவுள்ளனர். அந்த கருத்துகளின் அடிப்படையில், திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.


இதையும் படியுங்கள்: DMK - VCK Alliance: நெருங்கும் தேர்தல் - அடம்பிடிக்கும் விசிக - 3 தொகுதிகளை கொடுக்குமா திமுக? இன்று 2ம்கட்ட பேச்சுவார்த்தை


தமிழக அரசின் திட்டங்கள்:


கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தது முதலே, பல்வேறு புதிய நலத்திட்டங்கள் மற்றும் உதவித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் மக்களை தேடி மருத்துவம்'. 'இல்லம் தேடி கல்வி, 'உங்கள் ஊரில் கலெக்டர்' போன்றவை அடங்கும். அதோடு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம்,ஒரு கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 292 பேரும்,  புதுமைப்பெண் திட்டத்தில் 4 லட்சத்து 81 ஆயிரத்து 75 மாணவிகளும் மாதந்தோறும் ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களும் அமலுக்கு வந்துள்ளன. இதுபோன்ற முன்மாதிரியன திட்டங்களை தொடங்கி வைக்கும் போது,  மக்களுடன் நேரடி தொடர்புகொண்டு நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


”நீங்கள் நலமா” திட்டத்தின் நோக்கம் என்ன? 


இந்நிலையில் இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்களின் பலன்கள் பயனாளர்களை சென்றடைகிறதா?  என்பதை உறுதி செய்யும் வகையில், "நீங்கள் நலமா?" என்ற புதிய திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இதில் முதலமைச்சர் தொடங்கி கடைமட்ட அரசு ஊழியர்கள் வரையிலான அனைவரும், பொதுமக்களை செல்போனில் தொடர்புகொண்டு "நீங்கள் நலமா?" என்று கேட்டு, அரசின் நலத்திட்டங்கள், அரசால் நிறைவேற்றப்படும் சேவைகள் பற்றியும், அது வந்து சேர்கிறதா? என்பது உள்ளிட்ட கருத்துகளை கேட்டறிய உள்ளனர். இந்த நடவடிக்கையால் அரசின் எந்த திட்டத்திலும் முறைகேடு நடக்காமல், அனைத்து குறைபாடுகளையும் களைந்து, அனைத்து பலன்களும் மக்களுக்கு நேரடியாக போய் சேரவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, மக்களின் கருத்துகளின் அடிப்படையில், அரசின் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.