OPS ADMK: அதிமுகவின் இரட்டை இலை சின்ன விவகாரத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் கருத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வாரத்திற்குள் வழக்கை முடிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


இரட்டை இலை வழக்கு விவரம்


திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ”அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிமுறைகளுக்கு செயல்பட்டது தொடர்பாகவும் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக தேர்தல் ஆணையத்துக்கு பல புகார்களை அளித்துள்ளேன். குறிப்பாக, அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தும் இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பி்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். 



ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பா?


இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அப்போது, சூர்யமூர்த்தியின் மனு தொடர்பாக அதிமுகவிற்கு நோட்டீஸ் அனுப்பி பதிலை பெற்றுள்ளோம் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அதேநேரம், தங்கள் தரப்பையும் கேட்ட பின்னரே முடிவு எடுக்க உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும் கோரிக்கை மனுவை தாக்கல் செய்து இருந்தது. அதையும் விசாரித்த நீதிமன்றம் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதிமுகவிற்கு சின்னம் ஒதுக்கக் கூடாது என்ற மனுவின் மீது 4 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


முடங்குமா இரட்டை இலை சின்னம்:


ஒருவேளை அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த பின்னர், நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் முடிவு பெறும் வரையில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படாது என்ற முடிவையும் தேர்தல் ஆணையம் எடுக்கலாம். அப்படி நடந்தால், இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயமும் உள்ளது. நாடாளுமன்றம் மற்றும் மக்களவை தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை எதிர்கொண்டு வரும் அதிமுகவிற்கு, இரட்டை இலை சின்னமும் இல்லை என்ற நிலை ஏற்பட்டால், அக்கட்சிக்கு அது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. காரணம், தன்னை அதிமுகவில் இணைக்க மறுத்தால், ஓபிஎஸ் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எடப்பாடிக்கு இணக்கமான முடிவை எடுப்பாரா என்பது கேள்விக்குறியே. 


அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு இடம் கிடைக்குமா?


சிதறி கிடக்கும் அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் என, ஓபிஎஸ் தொடர்ந்து பேசிவருகிறார். ஆனால், கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வருகிறார். இதனால், ஓபிஎஸ்-க்கு மீண்டும் அதிமுகவில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு அரிதே. அதேநேரம், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையேயான வழக்குகள் சிவில் வழக்குகள் என்பதால், அதற்கு உடனடியாக தீர்வு கிடைப்பது என்பது சந்தேகமே. இதனால், நீண்ட காலத்திற்கு இரட்டை இலை சின்னம் முடங்கவும் வாய்ப்புள்ளது.