TN Rain Alert: வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக, இன்று (22-ஆம் தேதி வாக்கில்) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24- ஆம் தேதி  காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது.

மேலும், இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் நாளை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் லேசான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை பதிவானது. இன்று அதிகாலை மடிப்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பதிவாகி வருகிறது.  

Continues below advertisement