தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மே மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை என்பது 43 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 4 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37°–39° செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மே 2 ஆம் தேதி மற்றும் 3 ஆம் தேதி இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூர், கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.