கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏற்பட்டதால், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
உலக சுகாதார அமைப்பு (World Health Organization), இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில் சீனாவின் பதில் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதில் தெரிவித்திருப்பதாவது:
”புதிய நோய் தொற்று கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் புதிய நோய்க்கான அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ள சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினர் முன்னரே அறிந்துள்ள வழக்கமான நிமோனியா தாக்குதல்தான் என சீனா பதிலளித்துள்ளது.
மேலும், மருத்துவமனைகளின் கொள்ளளவிற்கு உட்பட்ட அளவில்தான் நோயாளிகளின் எண்ணிக்கை இருப்பதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்தது. இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே கேரளாவில் 79 வயது மூதாட்டி ஒருவருக்கு உருமாறிய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. அங்கு கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் ஏழு மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
கேரளாவில் தற்போது வரை 1,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் எத்தனை பேர் ஜே.என் 1 வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது உறுதியாக தெரியவில்லை எனவும், மாநிலத்தில் கொரோனா சோதனைகள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருவதாகவும் கேரள அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 4 பேருக்கு புதிய வகை கொரோனாவான ஜெ.என் 1 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருச்சி, கோவை மதுரையை சேர்ந்த 4 பேருக்கு இந்த வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இணை நோய் தொடர்பாக சிகிச்சைக்கு வந்தவர்களை பரிசோதித்தபோது ஜெ.என் 1 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டது. பரிசோதனை மாதிரிகள் புனேவில் உள்ள மையத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் ஜெ.என் 1 கொரோனா என தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க
டிச;31-ல் மீண்டும் தென் மாவட்டங்களை தாக்கும் கன மழை... எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?