காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ளது கடல்மங்களம் கிராமம் இக்கிராமத்தில் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினரால் பெருமாள் கோவிலுக்கு தானமாக வழங்கும் நிலத்தின் எல்லையை குறிக்கும் 16ம் நூற்றாண்டை சார்ந்த  வாமனக்கல் மற்றும் சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கும் நிலத்தின் எல்லையை குறிக்கும் சூலக்கற்கள் இரண்டும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



 

இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது, கடல் மங்கலம் கிராமத்தை சேர்ந்த வஜ்ரவேல் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அக்கிராம காட்டுப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது  இந்த கற்களை கண்டறிந்தோம். இது விஜயநகர மன்னர்களின் காலத்தை சார்ந்ததாகும். இக்கிராமத்திலுள்ள அம்மன் கோயிலுக்கு அருகில் இரண்டு அடி அகலமும் ஒன்றரை அடி உயரத்தில்  உள்ள வாமன கல்லை கண்டறிந்தோம்.



 

இதிலுள்ள வாமன உருவம் நின்ற நிலையில் வலது கையில் கமண்டலத்தையும்  இடக்கையில் விரித்த குடையை ஏந்திய படியும் தலையில் குடுமியும் மார்பில் பூணூலும் இடுப்பில் பஞ்சகச்ச வேட்டியும் இடம்பெற்றுள்ளது தலையின் மேற்பகுதியில் சூரியன், சந்திரன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் பெருமாள் கோவிலுக்கு நிலத்தை தானமாக வழங்கும்பொழுது அப்படி வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையை குறிக்கும்  அடையாளமாக  அதில் விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன உருவம் பொறித்த கல்லை நடுவார்கள் ஆகவே இது வாமனக்கல் எனப்பட்டது. இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.



 

மேலும், அக்கிராமத்தில் உள்ள  அழிஞ்சல் காட்டுப்பகுதியில் சிவன் கோவில்களுக்கு தானமாக வழங்கப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும் சூலக்கல்லையும் கண்டறிந்தோம். ஒன்றரை அடி அகலமும் ஒரு அடி உயரமும் கொண்டதாக இது உள்ளது. இதில் சூரியன் சந்திரன் சிவலிங்கம் ஆகிய உருவங்கள் இடம் பெற்றுள்ளன மன்னர்கள் சிவன் கோவில்களுக்கு தானமாக வழங்கும் நிலத்தின் எல்லையை குறிப்பதற்காக இவ்வுருவம் பொறித்த கற்களை அடையாளமாக நட்டு வைப்பார்கள்.

 

இதற்கு சூலக்கற்கள் என்று பெயர் இதுவும் விஜயநகர மன்னர்கள் காலத்தை சார்ந்ததாகும் மூன்றாவதாக அக்கிராமத்தில் உள்ள பாப்பாத்தி குட்டை அருகில் ஒன்றரை அடி அகலமும் ஒரு அடி நீளமும் கொண்ட மற்றொரு சூலக்கல்லை கண்டறிந்தோம் இதிலும் சூரியன், சந்திரன் சிவலிங்கம் ஆகிய உருவங்கள் இடம் பெற்றுள்ளன. பொதுவாக மன்னர்கள் கோவில்களுக்கு நிலத்தை தானமாக வழங்கும் போது அதற்கு வரியை நீக்கி இறையிலி நிலங்களாக வழங்குவார்கள். அந்நிலங்களின் எல்லைகளில் அடையாளமாக இந்த சூலகற்களை நடுவார்கள் இக்கற்களில் சூரியன் மற்றும் சந்திரன் இடம்பெற்றிருக்கும். தாங்கள் கொடுத்த தானம் சூரியன் மற்றும் சந்திரன் உள்ள வரை செல்லுபடியாகும் என்பதை குறிக்கவே இக்குறியீடுகளை பொறிப்பார்கள்.



 

இந்நிலங்களின் மூலம் பெறப்படும் வருவாய் ஆலயத்தின் நிதி வருவாய்கான  ஏற்பாடாக இருந்தது. இதன் மூலம்  ஆலயங்களுக்கு அன்றாட பூசைகள் செய்தல் விளக்கெரித்தல், திருவமுது படைத்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் முதலியவை செய்யப்பட்டன. உத்தரமேரூரில் 16ஆம்  நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் ஆண்டுகொண்டு இருந்தார்கள் அப்போது இந்நில தானங்களை அளித்துள்ளார்கள். இவை அனைத்தும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும் இது அந்த ஊரிலோ அல்லது அருகிலுள்ள ஊரிலோ உள்ள பெருமாள் மற்றும் சிவன் கோயில்களுக்கு வழங்கப்பட்ட நில தானத்தை குறிப்பதாகக் கொள்ளலாம்.



 

ஒரே ஊரில் பெருமாள் மற்றும் சிவன் கோவிலுக்கு நில தானம் அளித்த கற்கள் இருப்பது எங்கள் பகுதியில் இதுவே முதல் முறையாகும். கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்திற்கு பறைசாற்றும் இவ்வகை அரிய வரலாற்றுப் பொக்கிஷங்களை காத்திடுவது நமது கடமையாகும் என அவர் தெரிவித்தார். இவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X