செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோணா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகம் வயது 56.  திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு கொரொனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில் இன்று மருத்துவமனை மொட்டை மாடியில் குடிநீர் பைப்பில் அணிந்திருந்த துணியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.




அதேபோல் , இன்று சின்ன காஞ்சிபுரம் வரதப்பா நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் வயது 54, கட்டிடங்கள் கட்டும் பணி செய்து வருகிறார். கோபாலகிருஷ்ணனுக்கு  கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதன்  காரணமாக காஞ்சிபுரம் அருகில் உள்ள  தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  தங்கி சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் அச்சம் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து யாரும் கவனிக்காத நேரத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


இதேபோல் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் இதுவரை 15க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தான் அதிக அளவு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.







இதுகுறித்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர் சதீஷ் குமார் கூறுகையில், ‛‛கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மன தைரியத்துடன் இருத்தல் அவசியம். தனிமை படுத்தி கொண்டு தனியாக இருப்பதும்,  அதேபோல உறவினர்களை பிரிந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவது ஆகியவை நிச்சயம் மனதளவில் சோர்வை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேபோல் முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால் நோயாளிகள் மனதளவில் சோர்வடைய வாய்ப்புகள் உள்ளது.


அதிலும் குறிப்பாக வயதானவர்கள் தனிமையாக இருப்பது போன்ற அசாதாரண சூழலில் மருத்துவமனையில் இருப்பது அவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆரம்ப கட்டத்தில் அவர்களுடன் உரையாடி அவர்கள் மன அழுத்தத்தை போக்கி வந்தனர். ஆனால் தற்போது பல மருத்துவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது, அதேபோல அதிக அளவு நோயாளிகள் வருகின்ற காரணத்தினால் நீண்ட நேரம் அந்த உரையாடல்களையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.




அதேபோல் ஊரடங்கு வருமானம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களினாலும் பொதுமக்களுக்கு தற்போது மன உளைச்சல் ஏற்பட்டு வருகிறது. ஆனால் கடந்த வைரஸ் தொற்றின் போது இருந்த பயம் தற்போது தேவை இல்லை. ஏன் என்றால் முதலில் நம்மிடம் எந்த ஆயுதமும் இல்லாமல் இந்நோயை நாம் எதிர் கொண்டோம், ஆனால் தற்போது நம்மிடம் தடுப்பூசி உள்ளது . அதேபோல் பல மாத்திரைகள் வைரஸ் தொற்றை குறைக்கிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமே தவிர அதீத பயம் இருத்தல் கூடாது, எனக்கூறியுள்ளார். 


அதேபோல் வைரஸ் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு நிச்சயம்  என்பதெல்லாம் கிடையாது .எந்த நோயாக இருந்தாலும் உயிர் இழப்பு என்பது இருக்கிறது அதேபோல் தான் இந்த நோய்க்கும் உயிரிழப்பு உள்ளது. 95% நபர்கள் உயிரோடு உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.குணமாகி வந்தவர்களை மனதில் நினைத்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அதிக நேர்மறையான எண்ணங்கள் பரவும்.




எனவே எதிர்மறை எண்ணங்களை கைவிட வேண்டும். சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை நம்ப வேண்டாம் அரசு சார்பில் அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை மட்டும் நம்புங்கள். அரசு சார்பில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது அந்த மருந்துகளை மருத்துவர்களின் ஆலோசனைப்படி எடுத்துக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.கொரோனா வைரஸ் தொற்று வந்தால் ஆக்சிஜன் தேவை என்பது கிடையாது ஆக்சன் குறையும் நோயாளிகளுக்கு இறுதி கட்டத்தில் மட்டுமே தேவைப்படுகிறது .அதை மனதில் வைத்துக்கொண்டு பதற்றம் இல்லாமல் இருந்தால் நிச்சயம் வைரஸ் தொற்றில் இருந்து எளிதாக மீண்டு விடலாம்,’ என்கிறார் மனநல மருத்துவர்  சதீஷ் குமார்.



தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சார்பில் பிரத்யேகமான தொலைபேசி எண்  வழங்கப்பட்டுள்ளது 7200953536 இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண் மூலம் மன உளைச்சலில் இருப்பவர்கள் பயன் அடையாளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.