தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் தள பக்கத்திலும் பதிவிட்டுள்ளது. அதில் உள்ள விவரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
நவ.22-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி - 24-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
இது குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பதிவில், நவம்பர் 22 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் இது, நவம்பர் 24, 2025 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை
முன்னதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நாளை முதல் வரும் 27-ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.
22 11-2025
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23-11-2025
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24-11-2025
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெவ்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
25-11-2025 - 27-11-2025
வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, நாளை (22.11.25): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகளில் நாளையும், நாளை மறுநாடும் எந்த எச்சரிக்கையும் இல்லை. ஆனால், 24 மற்றும் 25-ம் தேதிகளில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வரும் 24-ம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.