"திருவள்ளூர் மாவட்டம் கூடுதல் விலைக்கு மது விற்ற விவகாரத்தில் விடுமுறையில் இருந்த மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது"
திருவொற்றியூர் டாஸ்மார்க் கடை
திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் திருவொற்றியூர் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் வள்ளியம்மாள் கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி இயற்கை எய்தினார். இதனைத் தொடர்ந்து, ஏழுமலை தனது தாயாரின் ஈமச்சடங்குகளில் கலந்து கொள்வதற்காக அக்டோபர் மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் விடுமுறை எடுத்திருந்தார்.
விடுமுறையில் இருந்தபோது ஆய்வு:
ஏழுமலை விடுமுறையில் இருந்த அக்டோபர் 29-ஆம் தேதி, அவர் பணிபுரியும் டாஸ்மாக் கடையில் தமிழக வாணிபக் கழகத்தின் சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, கடையில் பணியாற்றிய ஊழியர் ராமு என்பவர் ₹140 மதிப்புள்ள மது பாட்டிலை ₹150-க்கு, அதாவது கூடுதலாக ₹10 வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ராமு, கூடுதலாகப் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டு கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார்.
ஊழியர் பணிநீக்கம்:
தலைமை அலுவலக அறிவுறுத்தலின்படி, நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதலாக ₹10 அல்லது அதற்கு மேல் வைத்து விற்பனை செய்யும் கடை பணியாளர் மற்றும் அதனைச் சரியாகக் கண்காணிக்கத் தவறிய கடை மேற்பார்வையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்தின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட மேலாளர், ஏழுமலையைத் தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்து நவம்பர் 4-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
தாயின் ஈமச்சடங்கில் கலந்துகொள்ள விடுமுறையில் இருந்த மேற்பார்வையாளர் மீது, கடை ஊழியர் செய்த தவறுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் இந்தச் சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.