வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக கன மழையானது பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது.

 



இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக அந்தந்த பகுதியை சேர்ந்த ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து , வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து, நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 






 

அதேபோல் அந்தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில், சமூக வலைதளத்திலும் புகார்களை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில், தங்கள் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து அப்பகுதி மக்கள் பதிவு செய்து வருகின்றனர்.






 

இந்நிலையில் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன், என் வீட்டின் எதிரே 2 அடி உயரத்துக்கு, தண்ணீர் தேங்கி உள்ளது. 3 மணி நேரத்துக்கு முன் என் வீட்டிற்கு உள்ளேயும் தண்னீர் புகுந்துவிட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளீர்களா? ( ரசிகர்கள் எல்லோரும்) என்று கேள்வி எழுப்பி பதிவிட்டு உள்ளார். அவர் பதிவு செய்து தொடர்ந்து அந்த டுவீட் சமூக வலைதளத்தில் மிக வேகமாக பரவ துவங்கியது. உடனடியாக எந்த பகுதியில் இவ்வாறு தண்ணீர் தேங்கி இருக்கிறது என்பது குறித்து தகவல் தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி சார்பிலும் ரிப்ளை செய்யப்பட்டிருந்தது.

 


சந்தோஷ் நாராயணன் பதிவு செய்திருந்த வீடியோவில், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் முதல் நிலை  ஸ்ரீ கணேஷ் நகர் முதல் தெரு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பதில் சொன்ன அமைச்சர் தா.மோ. அன்பரசன், "  இதுவரை தாங்கள் குறிப்பிட்டுள்ள பகுதியில் நான் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகிய இருவரும் இணைந்து இரண்டு முறை ஆய்வு மேற்கொண்டுள்ளோம், இந்த பிரச்சனைக்கு அருகில் இருக்கும் கால்வாய் மூலம் அதிகம் நீர் வருவது தான். அதன் உயரத்தை அதிகரிக்க கூறி இருக்கிறேன்" என கூறி இருக்கிறார்.  சந்தோஷ் நாராயணன் அமைச்சருக்கு நன்றி கூறி இருக்கிறார்.